ஈரோடு: கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள், ரோடுஷோ உள்ளிட்டவைகள் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தவெகவில் சமீபத்தில் இணைந்து, மாநில உயர்மட்ட நிர்வாகக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அமைப்பு செயலாளருமாகவும் நியமிக்கப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நடிகர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்து நேற்று இதற்கான அனுமதி கேட்டு ஈரோடு கலெக்டர் கந்தசாமி மற்றும் மாவட்ட எஸ்.பி. சுஜாதாவிடம் மனு அளித்தார்.
அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சுஜாதா, மனுவில் கூறப்பட்டிருந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது தவெக சார்பில் குறிப்பிடப்பட்ட இடம் 7 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. ஆனால், கூட்டத்துக்கு 75 ஆயிரம் பேர் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அந்த இடம் போதானதாக இல்லை. அதிகபட்சம் அங்கு 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை மட்டும் அமர முடியும். மேலும், வாகனங்கள் நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுக்கும் அந்த இடம் பற்றாக்குறையாகவே இருக்கும் என்பதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனக்கூறி மாவட்ட காவல்துறை நிர்வாகம் மாற்று இடம் குறித்து தெரிவிக்குமாறு கூறியுள்ளது.
இதுதொடர்பாக செங்கோட்டையன் கூறுகையில், அரசு என்ன விதிமுறைகளை வகுத்துள்ளதோ, அதை நிறைவு செய்து, வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். ‘ரோடு ஷோ’ தவிர்க்கப்பட்டுள்ளது. பவளத்தம்பாளையத்தில் உள்ள தனியார் நிலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு இருந்தோம். அனுமதி மறுக்கப்பட்டதாக போலீசாரிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை.
தகவலும் இல்லை. ஆனால் ஊடகங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து மாற்று இடம் தேர்வு செய்வதற்காக விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகில் சென்று பார்வையிட்டோம். அங்கு பொதுக்கூட்ட திடல், வாகன நிறுத்துமிடம் என 10 ஏக்கர் நிலம் உள்ளது. இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் இடம் கேட்டு அனுமதி கடிதம் வழங்கி உள்ளோம். பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது’ என்றார்.
