ஆன்மிகம் என்ற பெயரில் கேடு கெட்ட மலிவான அரசியல் சமூகத்தை துண்டாட நினைத்தால் மக்கள் விரட்டி அடிப்பாங்க: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

 

* எத்தனை சூழ்ச்சி செய்தாலும் முறியடிப்போம்
* அந்த ‘பாச்சா’ எல்லாம் எங்கிட்ட எடுபடாது

மதுரை: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8.45 மணியளவில் கருப்பாயூரணியில் நடைபெற்ற மக்கள் விடுதலைக் கட்சி நிறுவனத் தலைவர் சு.க.முருகவேல்ராஜன் மகன் இந்திர தனுஷ்ராஜன் – வழக்கறிஞர் சாதனா திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் சுற்றுச்சாலை தனியார் அரங்கில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து மதுரை, உத்தங்குடி கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்று ரூ.2,630.88 கோடியில் 63 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.17.18 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 1,41,049 பயனாளிகளுக்கு ரூ.417.43 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் ‘வேறு’ அரசியலை பேசுகிறார்கள். நான் உறுதியாக சொல்கிறேன்.. அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையும் நாங்கள் முறியடிப்போம். அதை சிதைப்போம்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அந்த “பாச்சா” எல்லாம் பலிக்காது. எதுவும் எடுபடாது.
நேற்று முன்தினம் நான் ஒரு ட்விட் செய்திருந்தேன்.

பார்த்திருப்பீர்கள் – படித்திருப்பீர்கள் – மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல் – அதை நிரூபிக்கின்ற வகையில் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு, 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 56 ஆயிரத்து 766 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்து கொண்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இதுதான் எங்கள் அரசியல். நாம் ஆட்சிக்கு வந்ததும் இந்த மதுரையில், ஒரு அறிவுத் திருக்கோயிலாக, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என்று அறிவித்தோம். அதை நாம் சொன்ன காலத்துக்கு முன்பே, பெரிதாக கட்டி முடித்தோம். ஆனால், பத்து வருடத்திற்கு முன்பு, ஒன்றிய பா.ஜக. அரசு, மதுரைக்கு அறிவித்த எய்மஸ் மருத்துவமனை என்ன ஆனது? இன்னும் வரவில்லை.

மதுரை மண்ணில் நம்முடைய வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு, உலக தரத்தில், 62 கோடி ரூபாயில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்திருக்கிறோம். இதே பாஜக அரசு நம்முடைய மதுரையில் நடந்த கீழடி அகழ்வாராய்ச்சியை நிறுத்தப் பார்த்தார்கள். நாம் ஆட்சிக்கு வந்ததும், பல கட்டங்களாக கீழடி ஆராய்ச்சியை முன்னெடுத்து வருவது மட்டுமல்லாமல், இதுவரை கிடைத்த தொல் பொருட்களை கொண்டு பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம் அமைத்திருக்கிறோம். ஆனால், இந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு கீழடி ஆய்வறிக்கை கூட வெளியே வந்துவிடக் கூடாது என்று தமிழ் மீது வெறுப்புடன் நடந்து கொள்கிறார்கள்.

மதுரையில் உலகத் தரத்தில் ஹாக்கி மைதானத்தைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கின்றது? குஜராத் போன்று, அவர்கள் கட்சி ஆளுகின்ற மாநிலங்களுக்கு விளையாட்டு நிதியை கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு என்றால் ஒன்றும் கிடையாது.அதுமட்டுமல்ல, பா.ஜக. தலைவர்கள் “மதுரைக்கு மெட்ரோ தேவையில்லை” என்று திமிராக வேறு பேசுகிறார்கள். மதுரைக்காரர்கள் என்றால், உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?

இப்படி, நம்முடைய சிந்தனை எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி; முன்னேற்றம்தான். ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான். தேவையில்லாத பிரச்சினையை கிளப்பி, நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். காலம் காலமாக கார்த்திகை தீபத்துக்கு, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்றுவது போல, கடந்த 3ம் தேதி மாலை 6 மணிக்கு, பால தீபம் ஏற்றப்பட்டது.

இவைகள் எல்லாம் உள்ளூர் மக்களுக்கும், உண்மையான பக்தர்களுக்கும் இது நன்றாக தெரியும். அவர்கள் நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டு தான் வீட்டிற்குச் சென்றார்கள். இந்தப் பிரச்னையைக் கிளப்புகின்ற கூட்டத்தின் நோக்கம் என்ன? இவையெல்லாமே மக்களுக்கு, நன்றாகவே தெரியும். ஆன்மீகம் என்பது, மன அமைதியை, நிம்மதியை தந்து, மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்கவேண்டும்.

நான்கு பேருக்கு நன்மை செய்யவேண்டும். இதுதான் உண்மையான ஆன்மீகமாக இருக்க முடியும். ஒரு சிலருடைய அரசியல் இலாபங்களுக்காக பிரிவுகளையும், பிளவுகளையும் உண்டாக்கி, சமூகத்தை துண்டாடும் சதிச்செயல்கள் நிச்சயமாக ஆன்மீகம் இல்லை. அது அரசியல். அதிலும் கேடுகெட்ட மலிவான அரசியல். நான் இன்னும் பெருமையோடு பக்தப் பெருமக்களுக்கு சொல்கிறேன்.. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்து ஆயிரத்து 490 நாளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.

இப்படிப்பட்ட அரசை, ஆன்மீகத்துக்கு எதிரி என்று சொன்னால், அப்படி சொல்லக் கூடியவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று, உண்மையான பக்தர்களுக்கு தெளிவாக தெரியும். அறத்தைக் கொண்டாடும் அமைதியான மாநிலமாகதான் தமிழ்நாடு என்றைக்கும் இருக்கும். மதுரை மக்களிடம் வளர்ச்சி என்று சொன்னால், வாங்க! வாங்க! என்று வரவேற்பார்கள். அதுவே வன்முறையை தூண்ட கூப்பிட்டால், என்ன செய்வார்கள் தெரியுமா?

மதுரை ஸ்லாங்கில் சொல்ல வேண்டும் என்றால், கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு ‘வெரட்டுவாய்ங்க!’ அமைதியின் பக்கம் நிற்கின்ற, மதுரை மக்களுக்கு நான் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! எங்கள் தமிழ்நாட்டில், என்றைக்கும் பெரியார் ஏற்றிய, சமத்துவ தீபம்தான் ஒளிரும்! உங்களால் அதை தடுக்க முடியாது! “எதிர்த்துக் கேட்க ஆள் இருக்கிறது! உள்ளே பெரியார் ஏற்றிய நெருப்பிருக்கிறது!” 2026-லும் அதே ஃபயருடன், திராவிட மாடல் அரசுதான் தொடரும்!
இவ்வாறு அவர் கூறினார்.

* வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு கால்வாயில் திடீர் ஆய்வு

மதுரை – தொண்டி சாலையில் ரூ.150 கோடியில் புதிதாக கட்டப்பட்ட வேலுநாச்சியர் மேம்பாலத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், வேலுநாச்சியாரின் வாரிசுகளுக்கு ஜல்லிக்கட்டு காளையின் சிலையை நினைவு பரிசாக வழங்கினார். அங்கு, நிறுவப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை சிலையும் திறக்கப்பட்டது. மேம்பாலத்தில் சிறிதுதூரம் நடந்து சென்ற முதல்வர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னதாக செல்லூர் கண்மாயின் உபரிநீர் வெளியேறும் பந்தல்குடி கால்வாயில் தொடங்கியுள்ள ரூ.60 கோடி மதிப்பிலான சீரமைப்பு பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார்.

* எப்படி பந்து வீசினாலும் சிக்சர் அடிப்போம் நாங்கள்தான் சாம்பியன்

‘நம்முடைய எதிரிகள், டெல்லியில் இருந்து நமக்கு எத்தனை இடைஞ்சல்கள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகள் ஏற்படுத்தினாலும், ஆளுநர் மூலமாக, முட்டுக்கட்டைகள் போட்டாலும், எல்லாவற்றையும் மீறி, இந்தியாவிலேயே நம்பர் 1 ஆக வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது. எங்களுடைய வளர்ச்சிப் பயணத்தை, உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனால் சதித்திட்டங்கள் எல்லாம் நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் எப்படி பந்து வீசினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்பது சிக்சர்தான்! அந்த டீமுக்கு ஏற்றார்போல அடிமைகள் சிக்கலாம். பழைய அடிமைகள், புது அடிமைகளை வைத்து, ‘பி’ டீம், ‘சி’ டீம் உருவாகலாம். ஆனால், கடைசியில் டோர்னமென்ட்டில் சாம்பியன் நாங்கள் தான்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* எம்எல்ஏ மகன் திடீர் கோஷம்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று பிற்பகல் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். இதற்காக அவர் மதுரை விமான நிலையம் வந்தவுடன், ‘‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதக் கலவரத்தை தூண்டுகிறார்கள்’’ என்று, ஒரு இளைஞர் திடீரென கோஷம் எழுப்பினார். போலீசார் அவரை மடக்கி விசாரித்தபோது, டெல்லி சட்டக்கல்லூரி மாணவரான அவர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியின் திமுக எம்எம்ஏ மார்கண்டேயன் மகன் அக்சய் என தெரியவந்தது. திருப்பரங்குன்றம் மலையில் வழக்கத்திற்கு மாறான இடத்தில் தீபம் ஏற்றும்படி, சர்ச்சையை உருவாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் கோஷமிட்டதாக கூறினார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: