சென்னை: தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 17ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னையில் டிசம்பர் 17ம் நாள் எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களை சமூக, கல்வி, பொருளாதார நிலையில் மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். எனவே, இந்தப்போராட்டத்தில் சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்களும் பங்கேற்று தமிழகத்தில் சமூகநீதியை பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும்.
