குழந்தையை கடத்திய ஆட்டோ டிரைவர்: போலீசாரிடம் தப்பிக்க ஓடியதில் கால் முறிந்தது

 

நாகர்கோவில்: மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த தம்பதி, 3 குழந்தைகளுடன் நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலய திருவிழாவுக்கு கடந்த 2ம் தேதி வந்து பலூன் வியாபாரம் செய்தனர். பின்னர், கடந்த 6ம் தேதி மதியம் சொந்த ஊர் செல்ல நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சென்றனர். இரவில் ரயில் என்பதால் ரயில் நிலையம் அருகே ரோட்டோரத்தில் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தனர்.

அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், அன்பாக பேசிகுழந்தைக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதாக கூறி தூக்கி சென்றார். 1 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் திரும்பி வராததால் பல இடங்களில் தேடிவிட்டு திரும்பி வரவில்லை. இதுபற்றி மாலை 6 மணியளவில் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 120 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் குழந்தையை ஆட்டோவில் ஏற்றி ஊட்டுவாழ்மடம் செல்லும் சாலையில் செல்வதும், குழந்தையை கடத்தியது கோட்டார் பகுதியை சேர்ந்த யோகேஷ் குமார் (32) என்றும், பார்வதிபுரம் அருகே இறச்சக்குளம் – ஆலம்பாறை ரோட்டில், மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.

இரவில் காட்டு பகுதியில் தனிப்படையினருடன் எஸ்.பி. ஸ்டாலினும் பைக்கில் ேதடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அங்கு யோகேஷ்குமாரின் ஆட்டோவை கண்டுபிடித்தனர். உள்ளே தூங்கி கொண்டிருந்த குழந்தையை மீட்டனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓடியதில் அவரது கால் முறிந்தது. கடத்தப்பட்ட குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசாரை அனைவரும் பாராட்டினார்.

Related Stories: