ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை அருகே வசிப்பவர் அர்ஜூனன். ரியல் எஸ்டேட் அதிபர். இவர் மருத்துவ சிகிச்சைக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரைக்கு சென்றுவிட்டார். நேற்று காலை இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், அர்ஜூனனுக்கு தகவல் தெரிவித்தனர். அர்ஜூனன் உடனடியாக புறப்பட்டு வீட்டிற்கு வந்து பார்த்தார்.
அப்போது பீரோவில் இருந்த 160 பவுன் தங்க நகைகள், ரூ.18 லட்சம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார், வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த உடையார்பாளையம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் சீமான் (எ) அனில் குமார்(52). அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வள்ளி. ஜெயங்கொண்டம் யூனியன் அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். பணி முடிந்து இரவு இருவரும் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அறைக்குள்ளே சென்று பார்த்தபோது, பீரோ கடப்பாரையால் உடைக்கப்பட்டு 45 பவுன் நகை மற்றும் ரூ.45 லட்சம் ரொக்கம் கொள்ளை போனதும் தெரியவந்தது. புகாரின்படி உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
