இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. பிரியங்கா காந்திக்காக நேற்று கடைசி நாள் பிரசாரத்திலும் ராகுல் காந்தி ஈடுபட்டார். நேற்று சுல்தான் பத்தேரி மற்றும் திருவம்பாடி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோட் ஷோவில் இருவரும் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிரியங்கா காந்தி பேசியது: வயநாடு தொகுதி முழுவதும் நான் சுற்றிவிட்டேன். பிரசாரம் முடிந்து எவ்வளவு தாமதமாக வந்தாலும் எனக்கு களைப்பு ஏற்படுவதில்லை. உங்களுடைய அன்பு தான் அதற்கு காரணமாகும். இந்தத் தொகுதியில் நான் சந்தித்த ஒவ்வொரு நபரும் என்னுள் ஒரு ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
உங்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பது குறித்து நான் புரிந்து கொண்டுள்ளேன். நீங்கள் எனக்கு அளவுக்கு அதிகமாக அன்பை தந்துள்ளீர்கள். நீங்கள் என் மீது செலுத்தும் அன்பை திருப்பித் தர எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல் காந்தி பேசியது: உங்களுடைய பிரச்னைகளை புரிந்து கொள்வதற்கும், தீர்ப்பதற்கும் உகந்த ஆள் தான் பிரியங்கா காந்தி. உங்களுக்கு இனி இரண்டு எம்பிக்கள் இருப்பார்கள். நானும், பிரியங்கா காந்தியும் சேர்ந்து உங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். வயநாட்டை சர்வதேச சுற்றுலாதலமாக்குவோம். வெளிநாட்டில் கேரளா வருபவர்கள் வயநாட்டுக்கு கண்டிப்பாக வரும் நிலையை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின்போது ராகுல் காந்தி ‘ஐ லவ் வயநாடு’ என்று எழுதப்பட்ட டீசர்ட் அணிந்திருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
The post வயநாட்டை சர்வதேச சுற்றுலாதலமாக்குவோம் : பிரியங்கா, ராகுல் காந்தி இறுதிகட்ட பிரசாரம் appeared first on Dinakaran.