பாஜ எம்பிக்கள் திட்டமிட்ட சதி நாடாளுமன்றத்தில் கூட இந்தி திணிப்பு நடக்கிறது: மார்க்சிஸ்ட் எம்பி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘நாடாளுமன்றத்திலும் இந்தி திணிப்பு நடக்கிறது. இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக்க பாஜ எம்பிக்கள் திட்டமிட்டு முயற்சிக்கின்றனர்’ என மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் குற்றம்சாட்டி உள்ளார். கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது.

முன்பெல்லாம், எம்பிக்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், ஆங்கிலத்தில் பதில் சொல்லும் ஆரோக்கியமான வழக்கம் இருந்தது. இப்போது அது சிதைந்துள்ளது. ஆளும் பாஜ கட்சியை சேர்ந்த எம்பிக்கள், அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், இந்தியிலேயே பேசுகின்றனர். சிலர் தப்பித் தவறி ஆங்கிலத்தில் பேசினால் கூட இந்திக்கு மாறும்படி ரகசிய சைகை செய்யப்படுகிறது. பாஜ எம்பிக்கள் இந்தியில் மட்டுமே பேச வேண்டுமென ரகசிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோல நாடாளுமன்றத்திலும், வெளியிலும் இந்தியை திணிக்கும் செயல்கள் நடக்கின்றன. இது இந்தி பேசாத மற்றும் தென் இந்திய மாநில எம்பிக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒன்றிரண்டு அமைச்சர்களை தவிர பெரும்பாலான பாஜ எம்பிக்கள் இந்தியில் மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசுகின்றனர். இதன் மூலம் இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக்கும் முயற்சி நடக்கிறது. இதை தனிப்பட்ட தற்செயல் சம்பவமாக பார்க்கவில்லை. இது ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே கருதுகிறேன். இவ்வாறு கூறி உள்ளார்.

The post பாஜ எம்பிக்கள் திட்டமிட்ட சதி நாடாளுமன்றத்தில் கூட இந்தி திணிப்பு நடக்கிறது: மார்க்சிஸ்ட் எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: