எலக்ட்ரிக் பேட்டரி, காஸ் சிலிண்டர் வெடித்ததில் மத்திய பிரதேசத்தில் 7 பேர் தீயில் கருகி பலி

 

இந்தூர்: இந்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சிறுமி உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், ஒரு வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்னணு வாகனத்தின் சார்ஜிங் பாயிண்ட் திடீரென வெடித்ததில் தீப்பற்றியது. இந்த தீ மளமளவென குடியிருப்பு முழுவதும் பரவியது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் தீயின் வீரியம் அதிகரித்தது.

வீட்டின் கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் லாக்குகள், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செயலிழந்து பூட்டிக்கொண்டன. இதனால் உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் மனோஜ் புகாலியா (65), விஜய் சேத்தியா (63), சுமன் (60), சிம்ரன் (30), சோட்டு சேத்தியா (22) மற்றும் ராசி சேத்தியா (12) உட்பட 7 பேர் உயிரிழந்தனர். அருகில் இருந்த கட்டிடத்தின் வழியாக மாடிக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 3 பேரை பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவம் வர்மா ஆகியோர் கூறுகையில், ‘மின்னணு வாகன சார்ஜிங் கோளாறு மற்றும் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததே இந்த விபத்துக்கு காரணம். தற்போது தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர். முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு மே மாதம், இதே இந்தூர் நகரின் சுவர்ண பாக் காலனியில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் ஸ்கூட்டருக்கு தீ வைக்கப்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். அந்த பழைய சம்பவத்தின் வடுக்கள் மறைவதற்குள், தற்போது மீண்டும் தீ விபத்து இந்தூரில் நிகழ்ந்துள்ளது.

Related Stories: