படிக்காதவர்களை விட படித்தவர்களே தவிப்பு; இந்தியாவில் 67 சதவீதம் பட்டதாரிகளுக்கு வேலையில்லை: பொருளாதார ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 

புதுடெல்லி: இந்தியாவில் உயர்கல்வி கற்ற இளைஞர்களுக்கு தகுதியான வேலை கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 லட்சம் இளைஞர்கள் பட்டதாரிகளாக உருவெடுத்தனர். ஆனால், அவர்களில் சுமார் 28 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது. குறிப்பாக, கடந்த 2017ம் ஆண்டில் வேலையில்லாத இளைஞர்களில் பட்டதாரிகளின் எண்ணிக்கை 46 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ‘இந்தியாவின் உழைக்கும் நிலை – 2026’ என்ற ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

அதில், ‘இந்தியாவில் 2023ம் ஆண்டு நிலவரப்படி, 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட வேலையில்லாத இளைஞர்களில் 67 சதவீதம் பேர் பட்டதாரிகள் ஆவர். கடந்த 2017ம் ஆண்டை விட தற்போது அதிகமாகும். 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளம் பட்டதாரிகளிடையே வேலையில்லா திண்டாட்டம் 40 சதவீதமாக உள்ளது. 25 முதல் 29 வயதுடையவர்களிடம் 20 சதவீதமாக குறைகிறது. அதாவது, நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்கிறது. பட்டம் முடித்த ஓராண்டிற்குள் நிரந்தரமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைப்பது வெறும் 7 சதவீதம் பேருக்கு மட்டுமே சாத்தியமாகிறது.

தகுதிக்கேற்ற வேலை கிடைக்காததால், பல பட்டதாரிகள் டெலிவரி பாய் போன்ற பணிகளுக்கோ அல்லது உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்கோ செல்லும் சூழல் உள்ளது. பொருளாதார ரீதியாக ஓரளவு வசதியுள்ள இளைஞர்கள், தகுதியான வேலை கிடைக்கும் வரை காத்திருப்பதையே விரும்புகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டதாரிகளாக வெளியே வந்தாலும், அவர்களுக்கு ஏற்ற உயர்தரமான வேலைகளை உருவாக்கும் திறன் குறைவாகவே உள்ளது. இந்த புள்ளி விபரங்களை பார்க்கும் போது கல்விக்கும் வேலைக்கும் இடையிலான இடைவெளியை காட்டுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: