கொலை வழக்கில் சிறையில் இருக்கும் உ.பி மாஜி எம்எல்ஏ வீட்டில் வெடிவிபத்து: மகன்கள் உட்பட 6 பேர் படுகாயம்

 

பரூக்காபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜய் சிங் வீட்டில் நடந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் அவரது இரு மகன்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரம்மா தத் திவேதி கடந்த 1997ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ விஜய் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் வாரணாசி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், பரூக்காபாத்தின் நாலா மச்ரட்டா பகுதியில் உள்ள விஜய் சிங்கின் நான்கு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு பயங்கர சத்தம் கேட்டது. தரைதளத்தில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தின் தாக்கம் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை எதிரொலித்தது. இதில் கட்டிடத்தின் மேற்கூரை தகர்ந்து, ஜன்னல்கள் மற்றும் சுவர்கள் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில் விஜய் சிங்கின் மகன்கள் அவினாஷ் மற்றும் அபிஷேக் உட்பட 6 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் விரைந்து ஆய்வு நடத்தினர்.

தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் தரப்பில், ‘வெடிவிபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எரிவாயு கசிவா அல்லது வெடிபொருட்கள் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டது. அந்த பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: