பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களுக்கு செல்ல நடிகை சாரா அலிகான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யணுமா?.. புதிய விதிகளால் பரபரப்பு

 

ேடராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் தரிசனம் செய்ய வரும் இந்து அல்லாத பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2018ம் ஆண்டு வெளியான ‘கேதார்நாத்’ திரைப்படத்தில் நடித்தது முதல், பாலிவுட் நடிகை சாரா அலிகான் தொடர்ந்து கேதார்நாத் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். முஸ்லிம் தந்தைக்கும் சீக்கிய தாய்க்கும் பிறந்த அவரது மத அடையாளம் குறித்த விவாதங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுந்து வந்தன.

இது தொடர்பாக கடந்தாண்டு நடந்த ஒரு மாநாட்டில் பேசிய சாரா அலிகான், ‘தன்னுடைய கோயில் வழிபாடுகள் முற்றிலும் தனிப்பட்டவை; அவை எனக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகின்றன’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான சார் தாம் யாத்திரை சீசனை முன்னிட்டு பத்ரிநாத் – கேதார்நாத் கோயில் கமிட்டி (பி.கே.டி.சி) புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கோயில் கமிட்டி தலைவர் ஹேமந்த் திவேதி, ‘இந்து அல்லாத பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் நுழைய வேண்டுமானால், ‘நான் ஒரு சனாதனி; எனக்கு இந்துத்துவத்தின் மீது நம்பிக்கை உள்ளது’ என்ற வாசகம் அடங்கிய முறையான பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விதிமுறை கேதார்நாத், பத்ரிநாத் உட்பட கோயில் கமிட்டியின் கீழ் வரும் 47 கோயில்களுக்கும் பொருந்தும்’ என்றார். மேலும் நடிகை சாரா அலிகான் வருகை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஹேமந்த் திவேதி, ‘சாரா அலிகான் சனாதன தர்மத்தின் மீது தமக்கு நம்பிக்கையும் பக்தியும் இருப்பதாக உறுதி அளித்து, அதற்கான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தால் மட்டுமே அவர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்’ என்று தெரிவித்தார். புதிய கட்டுப்பாடுகளால் நடிகை சாரா அலிகான் கேதார்நாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வாரா? என்பது கேள்வியாக உள்ளது.

Related Stories: