புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி பிரியாவிடை அளித்து உரையாற்றினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இருந்து இன்றுடன் ஓய்வுபெறும் உறுப்பினர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘நாடாளுமன்றத்தில் நகைச்சுவை மற்றும் நையாண்டி இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சமீபகாலமாக அவை படிப்படியாக குறைந்து வருவதை காண்கிறோம். இருப்பினும், மூத்த அமைச்சர் அதாவலே எப்போதுமே பசுமையானவர். அவர் சபையை விட்டுச் சென்றாலும், நகைச்சுவைக்கு இங்கே எந்தக் குறையும் இருக்காது.
அவர் தொடர்ந்து தனது நையாண்டி மற்றும் நகைச்சுவை உணர்வால் சபையை மகிழ்விப்பார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத் பவார் போன்ற தலைவர்கள் தங்களின் வாழ்நாளில் 50 சதவீதத்திற்கும் மேலான காலத்தை நாடாளுமன்றப் பணிகளுக்காகச் செலவிட்டுள்ளனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் இவர்களிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். சபையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடக்கின்றன, அதில் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்துவமான பங்கினை வகிக்கின்றனர்.
இத்தகைய தருணங்களில், அரசியல் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு பொதுவான மரியாதை உணர்வு உருவாகிறது. பதவிக்காலம் முடிந்து சபையை விட்டு வெளியேறும் தலைவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், அரசியலில் ஒருபோதும் முற்றுப்புள்ளி என்பது கிடையாது’ என்று பேசினார். தற்போது மாநிலங்களவையில் 2026ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதா குறித்தும், மக்களவையில் பல்வேறு அமைச்சகங்களுக்கான 2026-27ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கைகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
