தவெக மீது வைக்கும் விமர்சனங்களுக்கு ‘கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள்’: தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக வெற்றி கழகம் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு ‘கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள்’ என தொண்டர்களுக்கு அதன் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இம்மாநாட்டில் கட்சி கொள்கைகள் மற்றும் கட்சி பயணிக்கபோகும் செயல்திட்டம் ஆகியவற்றை குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் விளக்கி பேசினார். மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என சூளுரைத்தார்.

இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் நிருபர்களை சந்தித்து பேசுகையில் ‘‘திராவிடம் என்பது வேறு. தமிழ்த் தேசியம் என்பது வேறு. திராவிடம் என்பது தமிழ்த் தேசிய இனத்துக்கு நேர் எதிரான ஒன்று. திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றல்ல. எனக்கு கொள்கை மொழி தமிழ்தான். இந்தி உள்பட எல்லா மொழிகளும் எங்கள் விருப்ப மொழிதான். மேலும், கொள்கை வேறு. உறவு வேறு. கொள்கைக்கு எதிராக யாராக இருந்தாலும் எதிரிதான். எங்களுக்கு ரத்த உறவைவிட லட்சிய உறவுதான் முக்கியம்’’ என்றார்.

இதற்கு விஜயை விமர்சித்து சீமான் இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் தாங்கள் அதனை மூளைக்குள் கொண்டுபோகவில்லை என்று தமிழக வெற்றி கழக நிர்வாகி சம்பத்குமார் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சீமான் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் முன்வைத்த விமர்சனங்களால் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள், அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராக கருதி விலகி செல்வார்கள். இதுமட்டுமல்லாது, தமிழக வெற்றி கழக மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசிய பேச்சுக்களுக்கும் மாநாட்டின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவர் பேசிய பேச்சுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது.

தவெக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் பல வேலைகள் உள்ள நிலையில், சீமானை போன்று பேசுபவர்கள் ஒவ்வொருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும். எனவே, எங்கள் அரசியல் எதிரி யார் என்பதை முடிவுசெய்து விட்டு களமாடிக்கொண்டு இருக்கிறோம். யாரை விமர்சனம் செய்ய வேண்டும், யாரை கடந்து போக வேண்டும் என்பதை விஜய் தங்களுக்கு உணர்த்தியுள்ளார். சீமான் தன் கருத்தை அவரது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை. மேலும், அவரவர் கருத்து அவரவர் உரிமை; முடிவை தமிழ்நாட்டின் மக்களின் கரங்களில் கொடுத்துவிட்டு தங்கள் பணியை கவனிப்பதே அனைவருக்கும் நல்லது. இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

இந்தநிலையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமையகத்தில் இன்று காலை அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தவெக மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு கண்ணியத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும், தனி நபர் விமர்சனங்களை தவிர்த்து விட்டு ஆதாரங்களுடன் சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டும், பூத் கமிட்டியில் அதிக பெண்களை இடம்பெற செய்யவேண்டும் என கூட்டத்தின் வாயிலாக நடிகர் விஜய் அறிவுறுத்தினார். மேலும், 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தவெக மீது வைக்கும் விமர்சனங்களுக்கு ‘கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள்’: தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: