சென்னை: மக்கள் சுமையை ஒன்றிய அரசு தான் ஏற்க வேண்டும் என்றும், காஸ் சிலிண்டர் விலை உயர்வில் எடப்பாடி பழனிச்சாமி மவுனம் காப்பது ஏன்? என்றும் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய வரலாற்றில் முதல் முறையாக காஸ் சிலிண்டர் விலை ரூ.2ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ60ம், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.114.5ம் உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மவுனமாக இருக்கிறார். இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் அல்லது ஒன்றிய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லக்கூட அவருக்கு மனம் வரவில்லை. அவர் இப்படி மவுனமாக இருப்பதற்கு காரணம் என்ன?. அவர் மவுனத்தை கலைக்க வேண்டும்.
பெட்ரோலிய துறை ஒன்றிய அரசிடம் இருக்கிறது. எனவே அவர்கள் தான் இந்த சுமையை தாங்கிக் கொள்ள வேண்டும். சிலிண்டருக்கு ரூ.100 குறைப்பதாக தமிழக அரசு சொன்னதை இப்போது சுட்டி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு மக்களின் துயரை போக்க ஆலோசனை நடத்தி வருகிறது. பிரதமரின் மோடி அரசு, அமெரிக்காவிடம் நமது உரிமைகளையும் வெளியுறவு கொள்கைகளையும் அடகு வைத்து விட்டது.
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவதற்கான விருப்ப தொகுதிகளை தயார் செய்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். விருப்பமுள்ள தொகுதிகள் கிடைக்குமா என்பதை விட வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பதும் கூட்டணி கட்சிகளின் பாரத்தை தாங்கிக் கொள்வதும் தான் திமுகவின் வழக்கம்.
இதை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். திமுக காங்கிரஸ் இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணி வெற்றி கூட்டணி. இது தமிழகத்தை பாதுகாக்கும் கூட்டணி. எனவே தான் எல்லா கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைகின்றன. அதிமுக பக்கம் யாரும் போகவில்லை. எங்கள் கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். சமீபத்தில் நடந்து முடிந்த மேல் சபை தேர்தலில் மிகவும் சாமானியமான தொண்டர் கிறிஸ்டோபர் திலக்குக்கு கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. அதேபோன்று, சட்டமன்ற தேர்தலிலும் சாதாரண தொண்டர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கிறிஸ்டோபர் திலக் எம்பி, கோபண்ணா, எம்.பி. ரஞ்சன் குமார், எம்எல்ஏக்கள் தாரகை கத்பர்ட், பிரின்ஸ் மற்றும் நிர்வாகிகள் இதயத்துல்லா, முத்தழகன், லெனின் பிரசாத் உள்பட பலர் உடன் இருந்தனர்.
