காஸ் விலை விர்ர்ர்ர்ர்… தேர்தலில் ‘கேம் சேஞ்சர்’

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறைந்தாலும், அதன் பலன் சாமானிய மக்களுக்குக் கிடைக்கிறதா என்ற கேள்வி தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் எரிவாயு விலை மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் இரண்டும் வேறு வேறாக உள்ளது என்பதே ஒரு கசப்பான உண்மை. தமிழகத்தின் சமையலறை அரசியல் எப்போதும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிலிண்டர் விலை என்பது வெறும் பொருளாதாரப் பிரச்னை மட்டுமல்ல, அது ஒரு அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத் தேர்தல்களில் பெண் வாக்காளர்கள் தான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். சிலிண்டர் விலை உயர்வு என்பது நேரடியாக குடும்பத் தலைவிகளின் மாதாந்திர பட்ஜெட்டைப் பாதிக்கிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்தும், அதன் பலன் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற உண்மை மக்களிடையே சென்றடைந்தால், அது ஒன்றிய அரசுக்கும், அதன் கூட்டணிக்கும் எதிரான அதிருப்தியாக வெடிக்கக்கூடும்.

வளைகுடா நாடுகளில் போர் மூண்டுள்ளதால், இந்தியா போன்ற இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நாடுகளுக்குப் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இந்தியா தனது சமையல் எரிவாயு தேவையில் பாதியளவுக்கும் மேலாக வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளதால், உலக அளவில் எரிசக்திப் போக்குவரத்து நடைபெறும் முக்கியப் பாதையான ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், சர்வதேசச் சந்தையில் எரிவாயுவின் விலை கட்டுப்பாடின்றி உயருவதுடன், இந்தியாவுக்கு வரும் சரக்குக் கப்பல்களின் வருகையிலும் பெரும் தடங்கல் ஏற்படும். இது சந்தையில் ஒரு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, சிலிண்டர் முன்பதிவு செய்தும் பல வாரங்கள் காத்திருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும்.

இந்தத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு என்பது வெறும் பொருளாதாரப் பிரச்னையாக மட்டும் நில்லாமல், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஒரு பிரம்மாண்டமான அரசியல் அதிர்வலையைத் தோற்றுவிக்கும். 2026-ம் ஆண்டு ஒரு மெட்ரிக் டன் எரிவாயு சர்வதேச விலை 590 டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் போர் தொடர்ந்து நடந்தால் இந்த விலை 1000 டாலரைக் கடக்கக்கூடும். அப்போது, ‘‘சர்வதேச விலை குறைவாக இருந்த காலங்களில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை ஒன்றிய அரசு இப்போது மானியமாக வழங்கி விலையைக் குறைக்க வேண்டும்’’ என்ற கோரிக்கை வலுவாக எழும். அவ்வாறு செய்யத் தவறினால், அது ஒன்றிய அரசுக்கு எதிரான மிகப்பெரிய அதிருப்தியாக மாறும்.

எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் அது கருப்புச் சந்தையில் சிலிண்டர் விலை விண்ணைத் தொடச் செய்யும். இது உணவகங்கள் முதல் சாமானிய வீடுகள் வரை அனைவரையும் பாதிக்கும் என்பதால், தேர்தல் களத்தில் ‘விலைவாசி உயர்வு’ என்பது மிக முக்கியமான பேசுபொருளாக மாறும். குறிப்பாகப் பெண் வாக்காளர்கள் மத்தியிலும், நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் இது ஒன்றிய அரசின் நிர்வாகத் திறமை மீதான சந்தேகத்தை ஏற்படுத்தும்.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கட்சிகள் இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மக்களிடம் இருந்து மறைமுகமாகப் பெற்ற லாபத்தை இக்கட்டான நேரத்தில் மக்களுக்குத் திருப்பித் தர அரசு முன்வரவில்லை என்ற பிரசாரத்தை முன்னெடுக்கும். இதனால், வளைகுடாப் போர் என்பது சர்வதேசப் பிரச்னையாக இருந்தாலும், அதன் நேரடித் தாக்கம் தமிழகத்தின் ஒவ்வொரு சமையலறையிலும் எதிரொலித்து, வாக்குப்பதிவின் போது ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Related Stories: