மாஜியை மிரட்டிய அதிமுக தலைமை: குஷியில் ‘மாவட்டம்’

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுகவில் வைத்திலிங்கம் இருந்தபோது அனைத்து பொறுப்பாளர்களும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தனர். அவர் அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைத்த பின், அந்த இடத்தை தக்க வைக்க முன்னாள் அமைச்சர் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆர்.காமராஜ் தஞ்சாவூரில் அடியெடுத்து வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது சமூகத்தை சார்ந்த பொறுப்பாளர்களை தன்வசம் வைத்துக்கொண்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

எடப்பாடியின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் தஞ்சை மாநகர செயலாளர் சரவணனின் ஆதரவாளர்கள், காமராஜ் வளர்ச்சி பிடிக்காமல் அவர் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணிக்க ஆரம்பித்தனர். இதனால் காமராஜின் ஆதரவாளர்களுக்கும், சரவணன் ஆதரவாளர்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் துவங்கியது.

இந்த தகவல் தலைமைக்கு தெரியவர காமராஜை அழைத்து திருவாரூர் மாவட்டத்தை மட்டும் நீங்கள் கவனித்தால் போதும், தஞ்சையில் அங்கு உள்ளவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என எச்சரித்தனர். இதனால் மனவேதனையில் இருந்த அவர், அதிமுக சார்பில் காமராஜ் ஆதரவாளர் சிலரை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனு அளிக்குமாறு அறிவித்துள்ளார். இந்த தகவல் உடனே மாஜி அமைச்சர் வேலுமணிக்கு சென்றது. இதில் கோபமடைந்த அவர், தஞ்சை தொகுதியை பொருத்தவரை சரவணனை எதிர்த்து அதிமுக சார்பில் யாரும் விருப்பமனு அளிக்க கூடாது என கறராக கூறிவிட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த காமராஜின் ஆதரவாளர்கள், தஞ்சை தொகுதியில் யாரும் சரவணனுக்கு ஓட்டுப்போட கூடாது என மறைமுகமாக கூட்டத்தை போட்டு பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாநகர செயலாளர் சரவணன், மேலிடத்தில் செல்வாக்கு இருந்தாலும், தொகுதியில் நமக்கு யாரும் வேலை பார்க்க மாட்டார்கள் என்ற பயத்தில் இருந்து வருகிறார். அதுமட்டுமன்றி வேலுமணி அவரது உதவியாளர் ஒருவரை வாரம் இருமுறை தஞ்சைக்கு அனுப்பி யார் யார் சரவணனுக்கு எதிராக வேலை பார்க்கிறார்கள் என்பதை கவனித்து தலைமைக்கு தகவல் சொல்லி வருகிறாராம்.

Related Stories: