தொகுதி பங்கீடு குறித்து திமுக- மார்க்சிஸ்ட் இடையே 2ம் கட்ட பேச்சு

சென்னை: தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன், மார்க்சிஸ்ட் இன்று காலை 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 28 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மநீம, தவாக, கொமதேக, எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அடுத்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.எஸ்.பாரதி ஆகிய 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று காலை மார்க்சிஸ்ட் கட்சியுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியே வந்த மார்க்சிஸ்ட் குழுவினர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக பேட்டியளித்தனர். திமுக தொடர்ந்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது.

Related Stories: