எல்லாம் டெல்லி கையில்தான் பாஜவிடம் ராமதாஸ் சரண்!

தமிழக அரசியலில் 1998 முதல் 2006 வரை தவிர்க்க முடியாத சக்தியாக பாமக இருந்தது. தனித்து போட்டியிட்டு 6 சதவீத வாக்கு வங்கியை தக்க வைத்து பெரிய கட்சிகளை கூட்டணிக்கு தன் பக்கமாக இழுத்தது. பின்னர் பாமக நிலையில்லாத கூட்டணி யுக்தியை பின்பற்றியதன் காரணமாக வாக்கு வங்கி சரிவடைந்தது. இது போன்ற சூழலில் யாருடன் கூட்டணி வைப்பது என்ற முடிவை பாமக நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணி எடுக்க ஆரம்பித்தார். இது பாமகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கட்சியை கைப்பற்றுவதில் தந்தை, மகன் இடையிலான பகிரங்க மோதலால் பாமக, இரண்டாக உடைந்து கிடக்கிறது. அதிமுகவுடன் கூட்டணியை அன்புமணி உறுதி செய்துவிட்ட நிலையில், சின்னமும் அவருக்கே கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் கடும் விரக்தியில் உள்ள ராமதாஸ் தன்னை நம்பியிருக்கும் நிர்வாகிகள், தொண்டர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் வயது மூப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை தாமதம் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை எந்த அணியுடன் தனது பயணம் என்பதை அறிவிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதிமுகவுடன் அன்புமணி கூட்டணியை முடிவு செய்தாலும் தொகுதி எண்ணிக்கை முடிவு ஆகாத நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, அதிமுக மூத்த தலைவர்கள் சிலரை தைலாபுரம் தோட்டத்திலிருந்து தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. அதற்கு உள்கட்சி விவகாரங்களில் எங்களால் தலையிட முடியாது என கைவிரித்ததோடு, எல்லாம் டெல்லி கையில்தான் உள்ளது என கூற, யாரிடம் இதுவரை பிடிகொடுக்காமல் ராமதாஸ் இருந்தாரோ அவர்களை தேடிச் சென்று சரணடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தனது மகளும், கட்சியின் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி மூலமாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை தொடர்பு கொண்டு தங்களது நிலைப்பாட்டை தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக மாம்பழம் சின்னத்தில் தாங்கள் தெரிவிக்கும் குறிப்பிட்ட தொகுதிகளில், வேட்பாளர்களை போட்டியிட வழிவகை செய்ய வேண்டும், தேர்தல் செலவுகளை ஈடுசெய்ய வேண்டும், இதை ஒப்புக் கொண்டால் எத்தனை சீட் என்ற விபரத்தை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துவிட்ட நிலையில், பாமக வாக்கு வங்கியை இழக்க பாஜ விரும்பவில்லை என்பதால் ராமதாசின் நிலைப்பாட்டை தெரிவித்து அன்புமணியிடம் சமாதானம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. ராமதாசை எப்படியாவது முதலில் உள்ளே இழுத்துவிட வேண்டும், மற்றதை அப்புறமாக பேசி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என பாஜ கருதுகிறது. ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணி, சேலம் அருள், முரளிசங்கர், மன்சூர் ஆகிய 5 பேருக்கு சீட்டை உறுதி செய்ய வேண்டும். இதனை ஏற்றுகொண்டால் கூட்டணி குறித்து பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பாஜ கூட்டணியில் ராமதாஸ் விரைவில் ஐக்கியம் ஆகுவார் என கூறப்படுகிறது.

* வேட்பாளர் லிஸ்ட் இப்ப வேணாங்க!
கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிமுக, பாஜ வேட்பாளர்கள் யார் என ஏறக்குறைய முடிவு செஞ்சுட்டாங்களாம். ஆனா திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் யார்னு தெரியாம, நாம வேட்பாளர்களை அறிவிக்க கூடாது என அதிமுக தரப்பு கறாராக இருக்குதாம். அதுக்கு முக்கியமான காரணம், திமுக தரப்பில் பலமான வேட்பாளர்கள அறிவிச்சுட்டா, போட்டி போடாம விட்டு தரலாம், இளைஞர்களுக்கு வாய்ப்பு என சொல்லி விலகலாம் என சில அதிமுக வேட்பாளர்கள் முடிவு செஞ்சிருக்காங்களாம். ஏற்கனவே திமுக அலை வீசுது, இதுல நாம போட்டி போட்டு கோடிக்கணக்குல ஏன் வீணா செலவு செய்யனும் என வெளிப்படையா பேசறாங்களாம். பாஜகவும் அதிமுகவுக்கு தைரியம் சொல்லி பாத்துக்கறேன் என கெத்து காட்டிட்டு இருந்துச்சாம்.

சமீப காலமாக பாஜ சைடுல எந்த ஆதரவும் இல்லையாம். கூட்டணியும் டல்லா இருக்குது, டில்லி மேலிடமும் தைரியம் சொல்லல, ஜெயிக்கற அறிகுறி பல கி.மீ தூரத்திற்கு தெரியல. என்னப்பா பண்றீங்க, நாங்க யாரை தான் நம்புறது என அதிமுக வேட்பாளர்கள் விரக்தியா கேட்கறாங்களாம். போன வருஷம் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுல சீட் கிடைக்குமா என கடும் போட்டியா இருந்துச்சு, இப்ப கட்சி மேலிடம் யாரு போட்டி போட வருவாங்கன்னு காத்திருக்குதாம்…நிலைமை இப்படி ஆகி போச்சே என அதிமுக வட்டாரம் விரக்தியா இருக்குதாம்.

Related Stories: