கூட்டணியில் சேர்க்க மீண்டும் மிரட்டும் பாஜ: 234 தொகுதிக்கும் வேட்பாளர் தேர்வை தொடங்கும் விஜய்

 

சென்னை: நடிகர் விஜய்யை கூட்டணியில் சேர்க்க பாஜ மீண்டும் தனது மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால் நகரங்களில் அதிமுகவை விட அதிக ஓட்டுக்கள் பெறுவோம் என்று கருத்துக் கணிப்புகள் தெரியவந்ததால், 234 தொகுதிக்கும் வேட்பாளர் தேர்வு செய்யும் பணியை அவர் இன்று முதல் தொடங்குகிறார். இதனால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய 4 அணிகள் போட்டியிடுகின்றன. அதில், தவெக புதிய கட்சியாக தேர்தலில் களம் காண்கிறது. இதனால் அந்தக் கட்சியின் பலம் மற்றும் பலவீனம் வெளியில் தெரியவில்லை. ஆனால், நகரங்களில் அதிமுக கூட்டணியை விட தவெக அதிகமாக வாக்குகளைப் பெறும் என்றும் பல இடங்களில் வெற்றி வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் தவெகவை எப்படியாவது தங்கள் அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்று அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திட்டமிட்டு காய்களை நகர்த்தினர். ஆனால் நடிகர் விஜயோ, தனது தலைமையில் தான் போட்டி என்பதில் உறுதியாக இருந்தார். அதிமுக, பாஜ அணியில் 3வது கட்சியாக சேர அவர் விரும்பவில்லை. பல இடங்களில் அதிமுக அணியை விட அதிக வாக்குகள் பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரியவந்ததால், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

ஆனால் கரூர் பொதுக்கூட்டத்தில் 41 பேர் பலியான பிறகு, தவெக நிர்வாகிகள் மூலமே சிபிஐக்கு வழக்கை மாற்றி விசாரிக்க வைத்தனர். பின்னர் சிபிஐ மூலம் பாஜ கூட்டணிக்கு கொண்டு வருவதற்காக அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. மேலும் அவரது படமான ஜனநாயகத்தை பாஜ முடக்கியது. இதனால் அவருக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் எப்படியும் தங்களிடம் வருவார் என்று அமித்ஷா எதிர்பார்த்தார். ஆனால் நடிகர் விஜயோ, தனது தலைமையில் போட்டி. அதேநேரத்தில் பாஜ, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று பல பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார். பாஜவை தனது கொள்கை எதிரி என்றே வர்ணித்தார்.

இந்தநிலையில்தான், தமிழகம் முழுவதும் மத்திய உளவுத்துறை ஒரு சர்வே எடுத்தது. அந்த சர்வேயில், நகரங்களில் அதிமுக கூட்டணியை விட நடிகர் விஜய் அதிக ஓட்டுக்களை பெறுவார். சில இடங்களில் வெற்றி பெறுவார். நகரங்களில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்று தெரியவந்தது. இதனால் எப்படியும் நடிகர் விஜய்யை எப்படியும் தனது கூட்டணிக்குள் கொண்டு வர என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.

கூட்டணி தொகுதி பங்கீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அப்போது, எப்படியும் நடிகர் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர சில திட்டங்கள் தன்னிடம் உள்ளது. அதுவரை தொகுதிப் பங்கீடு செய்ய வேண்டாம் என்று அமித்ஷா கூறியுள்ளார். இதனால்தான் கூட்டணியில் உள்ள மற்ற எந்த கட்சிகளுடனும் பேசாமல், குறிப்பாக தேமுதிகவுடன் கூட பேசாமல் சேலத்தில் முகாமிட்டு விட்டார்.

மேலும், விஜய்யை வீக் செய்தால்தான் தம் கூட்டணிக்கு வருவார் என்று தீட்டிய திட்டத்தினால் தான் திரிஷா விவகாரத்தை பாஜ மேலிட உத்தரவுப்படி கையில் எடுத்தார் நயினார் நாகேந்திரன். அவர்கள் எதிர்பார்த்தது போலவே பிரச்சனை பெரிதானவுடன் விஜய்யை தம் பக்கம் இழுத்து அவரை விழுங்கி காலி செய்யும் வேலையை அதிமுக, பாஜ தரப்பு தொடங்கியிருக்கிறது. அதேநேரத்தில், ஜனநாயகன் ரிவ்யூ கமிட்டி உறுப்பினர் உடல்நிலையை காரணம் காட்டி தேதி குறிப்பிடாமல் படம் பார்ப்பதை தள்ளி வைத்து விட்டனர். மேலும் நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆனால் நடிகர் விஜய்யோ அரசியல் தெளிவோடு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜவுடன் கூட்டணி சேர்ந்தால், 30 தொகுதிகள் வரை தர சம்மதிப்பதாக கூறியுள்ளனர். இது பாமகவுக்கு இணையான தொகுதிகள்தான். இதற்காக ஏன் நாம் அவர்களுடன் சேர வேண்டும். துணை முதல்வர், அமைச்சர் பதவி தருவதாக கூறுகிறார்கள்.

அதற்காக 30 தொகுதிகளில் போட்டியிட்டு எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்று பிரசாரம் செய்ய முடியுமா? ஆனால் தனித்துப் போட்டியிட்டே 2வது இடத்துக்கு தவெக வந்துவிடும். தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும். தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார். கட்சி காணாமல் போகும். அப்போது அதிமுக இடத்துக்கு அதாவது 2வது இடத்துக்கு தவெக வந்துவிடும். அப்போது திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் நேரடி போட்டி என்ற நிலை உருவாகும்.

அதைவிட்டு விட்டு பாஜ கூட்டணியில் சேர்ந்தால், மகராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளை விழுங்கியதுபோல் தவெகவையும் அக்கட்சி விழுங்கிவிடும். அதிமுகவும், தவெகவும் தமிழகத்தில் இல்லாமல் போய்விடும். அப்போது தமிழகத்தில் திமுகவுக்கும், பாஜவுக்கும் நேரடி போட்டி உருவாகும் நிலை ஏற்படும். தமிழகத்தில், பாமக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும். தன்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவார்கள். இதேபோல அதிமுக கூட்டணியில் தேமுதிக முன்பு சேர்ந்தது. ஆனால், 3 மாதங்களில் ஜெயலலிதாவை விஜயகாந்த் எதிர்த்தவுடன் அக்கட்சியின் எம்எல்ஏக்களை எல்லாம் இழுத்து தேமுதிகவை பலவீனமடைய செய்தார். அதுபோன்ற நிலை தனக்கும் ஏற்பட்டு விடும் என விஜய் நினைக்கிறார்.

இதனால் கொள்கைக்காக தனித்துப் போட்டியிட்டு நகரங்களில் 2வது இடம் அல்லது வெற்றியை பெற்று தமிழகத்தில் தனித்துவமான கட்சியாக இருப்பதே எதிர்காலத்துக்கு சிறந்தது என்று விஜய் முடிவெடுத்துள்ளதாகவும், அந்த திட்டத்தையே அவரது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் விடாமுயற்சியாக பாஜ தனது மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. நடிகர் விஜய்யோ, இன்று முதல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியை தொடங்குகிறார். ஆர்வம் உள்ள, செல்வாக்கான வேட்பாளர்களை ஏற்கனவே அவர் பல தொகுதிகளுக்கு அடையாளம் கண்டு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் புதிய படையுடன் அவர் தேர்தலில் களம் காணுவார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Related Stories: