பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி மீண்டும் தேர்வு: இன்று பதவியேற்பு

பஞ்ச்குலா: அரியானா சட்ட பேரவை பாஜ கட்சி தலைவராக நயாப் சிங் சைனி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று முதல்வராக பதவியேற்கிறார். சமீபத்தில் நடந்த அரியானா மாநில சட்ட பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், பாஜ கட்சி தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. அரியானாவில் 2 முறை முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டு நயாப் சிங் சைனி முதல்வராக நியமிக்கப்பட்டார்.பேரவை தேர்தலின் போது நயாப் சிங் சைனி முதல்வர் வேட்பாளர் என்று பாஜ பிரசாரம் செய்தது. பேரவையில் உள்ள 90 இடங்களில் பாஜ 48 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களை வென்றுள்ளது.

இந்த நிலையில்,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மபி முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் பாஜ மேலிட பார்வையாளர்களாக இருந்தனர். இதில், பாஜ கட்சியின் தலைவராக நயாப் சிங்கை எம்எல்ஏக்கள் கிஷன் குமார் பேடி, அனில் விஜ் ஆகியோர் வழிமொழிந்தனர். கூட்டத்தில் பாஜ கட்சியின் தலைவராக நயாப்சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அமித் ஷா அறிவித்தார். இதையடுத்து மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை அவர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். முதல்வர் பதவி ஏற்பு விழா இன்று காலை நடக்கிறது. இதில், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

The post பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி மீண்டும் தேர்வு: இன்று பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: