மேற்கு வங்க பலாத்கார தடுப்பு மசோதா குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பிவைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு வழி வகை செய்யும் அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதா 2024 கடந்த 3ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மசோதாவுக்கான சட்ட அறிக்கையை அரசு அனுப்பிவைக்கவில்லை என்று தெரிகிறது. இது குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரி கூறுகையில், ‘‘விதிமுறைகளின்படி மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவு எடுப்பதற்கு முன் சட்ட அறிக்கையை மாநில அரசு அனுப்பி வைப்பது கட்டாயமாகும்.

ஆனால் தொழில்நுட்ப அறிக்கைகளை அரசு நிறுத்தி வைப்பதும், மசோதாக்களை நிறைவேற்றவில்லை என்று ஆளுநர் மீது குற்றம்சாட்டுவதும் இது முதல் முறை அல்ல. இதுபோன்ற முக்கியமான விவகாரங்களில் நடைமுறைகளை பின்பற்ற தவறியதற்காக மாநில அரசை ஆளுநர் கடிந்துகொண்டுள்ளார். அபராஜிதா மசோதா ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட இதேபோன்ற மசோதாக்களின் நகல் போல் தெரிகிறது என ஆளுநர் சுட்டிக்காட்டினார்” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஆளுநர் ஆனந்த போஸ் மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

The post மேற்கு வங்க பலாத்கார தடுப்பு மசோதா குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: