வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு; அதிமுக மாஜி அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள், சாட்சிகள் உள்ளன: சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்


சென்னை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சரோஜாவின் அண்ணன் மருமகன் ஆவார். இவர் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது ராசிபுரம் காவல் நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு 15 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக ₹76.50 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார். பணத்தை சரோஜாவிடம் தான் வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ள சரோஜா, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை வந்தது.

அப்போது காவல்துறை சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகிலன்ஆஜராகி, முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிரான புகாரில் போதுமான ஆதாரங்கள் சாட்சிகள் உள்ளதாக தெரிவித்தார். 34 சாட்சிகள் உள்ளதாகவும் ஆவணங்கள் உள்ளதாகவும் அவரது வீட்டுக்கே சென்று பணம் கொடுத்ததற்கான சாட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் வழக்கை ரத்து செய்யக்கூடாது என தெரிவித்தார். இதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக சரோஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு; அதிமுக மாஜி அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள், சாட்சிகள் உள்ளன: சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: