பாலக்காடு : பாலக்காடு -திருச்சூர் தேசிய சாலையில் லாரியை கத்தியை காட்டி வழிமறித்து, எருமை, காளை கன்றுகளை லாரியுடன் துணிகரமாக கொள்ளையடித்த கும்பலில் அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும், 13 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். ஆந்திர பிரதேசத்தில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்கு 50 எருமை கன்றுகள், 27 காளை கன்றுகளுடன் லாரியில், டிரைவர் உட்பட 3 பேர் கோட்டயம் நோக்கி பாலக்காடு திருச்சூர் தேசிய சாலையில் சென்றனர். அப்போது வடக்கஞ்சேரி அருகே ரோயல் சந்திப்பு பகுதியில் 15 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் இவர்களது லாரியை தடுத்து நிறுத்தியது.
மேலும், கத்தியை காட்டி லாரியை கிழக்கஞ்சேரி பகுதிக்கு செலுத்துமாறு மிரட்டியது. இதையடுத்து, கிழக்கஞ்சேரியை அடுத்த வேங்கசேரியில் லாரியை நிறுத்தி லாரியில் இருந்து 50 எருமை கன்றுகளையும், 27 காளை கன்றுகளையும் இறக்கி லாரியையும் அபகரித்தனர். பின்னர், லாரி டிரைவர் உள்ளிட்ட 3 பேரை கொள்ளையர்கள் வந்த காரில் ஏற்றி வடக்கஞ்சேரி டவுன் பகுதியில் சுற்றியடித்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மூவரையும் இறக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
இதுகுறித்து லாரி டிரைவர் உட்பட 3 பேரும் வடக்கஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்ட கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளை வழக்கில் வடக்கஞ்சேரியை அடுத்த கிழக்கஞ்சேரி சீரக்குழியை சேர்ந்த சகோதரர்கள் ஷமீர் (35), ஷஜீர் (31) ஆகியோரை வடக்கஞ்சேரி போலீசார் கைது செய்தனர். மேலும், வழிப்பறி கும்பலை சேர்ந்த மேலும் 13 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வழிப்பறி கும்பலால் கடத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மீட்கப்பட்ட காளை கன்றுகளையும், எருமை கன்றுகளையும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னர், ஆந்திரா லாரி மூலமாக கோட்டயத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பாலக்காடு – திருச்சூர் சாலையில் துணிகரம் லாரியை வழிமறித்து எருமைகளை கொள்ளை அடித்த அண்ணன், தம்பி கைது appeared first on Dinakaran.