மனைவியின் நடத்தையில் சந்தேகம்; மாமனார், மாமியார் சரமாரி குத்திக் கொலை: மருமகன் கைது

நெல்லை: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் ஆத்திரத்தில் மாமனார், மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை, ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (60). இவரது மனைவி செல்வராணி (55). இவர்களது மகள் ஜெனிபர் (30), அதே பகுதியைச் சேர்ந்த மரியகுமார் (36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மரிய குமார் கிடைத்த வேலைக்குச் சென்று சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஜெனிபர் அவரை பிரிந்து அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றார். வயதான பெற்றோர மற்றும் குழந்தைகளின் அன்றாட செலவுகளை மேற்கொள்ள முடியாமல் ஜெனிபர் திணறினார். பல்வேறு இடங்களில் வேலை தேடிய அவருக்கு பெங்களூருவில் வேலை கிடைத்தது. அதனால் குழந்தைகளை பெற்றோரிடம் விட்டு விட்டு சில நாட்களுக்கு முன் பெங்களூரு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மரியகுமார், மாமனார் வீட்டிற்குச் சென்று மனைவியை எங்கே எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவர்கள் ஜெனிபர் இங்கே இல்லை எனக்கூறியதால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்தார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மரியகுமார் கத்தியால் மாமனார் பாஸ்கரையும், மாமியார் செல்வராணியையும் குத்திக் கொலை செய்தார். அவர்களின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை பிடிக்க முயன்றனர். உடனே மரியகுமார் கத்தியை முட்காட்டில் வீசி விட்டு தப்பினார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து மரியகுமாரை கைது செய்தனர்.

The post மனைவியின் நடத்தையில் சந்தேகம்; மாமனார், மாமியார் சரமாரி குத்திக் கொலை: மருமகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: