திருத்தணியில் பரபரப்பு சம்பவம் வங்கியில் பணம் செலுத்த வரிசையில் நின்றவரிடம் ரூ.92 ஆயிரம் நூதன திருட்டு: பிளேடால் கிழித்து பெண்கள் கைவரிசை

திருத்தணி: வங்கியில் பணம் செலுத்த வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளரிடம் நூதன முறையில் ரூ.92 ஆயிரம் பணம் திருடப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாலங்காடு ஒன்றியம், சந்தானகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்தாஸ் (52). இவரது மனைவி சாந்தி. இவர், மகளிர் சுய உதவிக்குழு தலைவராக செயல்பட்டு வருகிறார். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பெற்ற வங்கிக்கடனை மாதந்தோறும் வசூல் செய்து திருத்தணி ம.பொ.சி சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், மகளிர் குழு உறுப்பினர்கள் செலுத்திய வங்கிக்கடன் தொகை ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு, குழு தலைவர் சாந்தியின் கணவர் மோகன்தாஸ் நேற்று மதியம் 12 மணிக்கு இந்தியன் வங்கிக்கு வந்தார். அப்ேபாது, கடன் கணக்கில் ரூ.1.17 லட்சம் செலுத்திய பின்னர், சுய உதவிக்குழு சேமிப்பு கணக்கில் ரூ.92 ஆயிரம் பணத்தை செலுத்த சலானை பூர்த்தி செய்து பணத்தை பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொண்டு வரிசையில் நின்றுள்ளார். அதன்பின்பு, பணத்தை செலுத்துவதற்காக கவரை எடுத்து பார்த்தபோது, பணத்தை யாரோ பிளேடால் அறுத்து எடுத்து திருடிச் சென்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து, மோகன்தாஸ் திருத்தணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில், அடையாளம் தெரியாத 2 பெண்கள் கைவரிசை காட்டியது அம்பலமானது. அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலிலேயே பணம் செலுத்த வந்தவரிடம் இருந்து நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்
திருத்தணி, ம.பொ.சி சாலையில் உள்ள இந்தியன் வங்கியில், தினமும் 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகள் பெறுகின்றனர். இருப்பினும் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப ஊழியர்கள் இல்லாததால், வங்கி சேவைகள் காலதாமதம் ஏற்படுவதால், பொதுமக்கள் அவதி அடைகின்றனர். மேலும், பாதுகப்பு பணியில் ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருத்தணியில் பரபரப்பு சம்பவம் வங்கியில் பணம் செலுத்த வரிசையில் நின்றவரிடம் ரூ.92 ஆயிரம் நூதன திருட்டு: பிளேடால் கிழித்து பெண்கள் கைவரிசை appeared first on Dinakaran.

Related Stories: