நத்தம் பகுதியில் நாவல் சீசன் துவங்கியது: ஒரு கூடை ரூ.600 வரை விலை போகிறது

 

நத்தம், ஜூன் 26: நத்தம் பகுதியில் நாவல் சீசன் துவங்கியதையடுத்து ஒரு கூடை ரூ.500 முதல் ரூ.600 வரை விலை போகிறது. நத்தம் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள பரளி, வேம்பரளி, புன்னப்பட்டி, சமுத்திராபட்டி, உலுப்பகுடி, மணக்காட்டூர், செந்துறை, சிறுகுடி உள்ளிட்ட மணற்பாங்கான பகுதிகளில் விவசாயிகள் நாவல் மரங்களை வைத்து பராமரித்து வருகின்றனர். இதில் நாட்டு ரகம் விதை பெரிதாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.

தற்போது ஒட்டு ரக நாவல் கனியானது விதை சிறுத்தும், சதைப்பகுதி கூடுதலாகவும், சில வகை விதையளவு சதையுமாக வரும் வகையில் நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வருகின்றனர். தற்போது நாவல் பழ சீசன் துவங்கியதையடுத்து இப்பகுதியில் விளைந்த பழங்கள் சுமார் 2 படி முதல் 3 படி வரையிலும் கூடையில் நிரப்பப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வர துவங்கியது. இது ரூ.500 முதல் ரூ.600 வரையில் விற்பனையாகிறது.

இதுகுறித்து விவசாயி சிவநேசன் கூறியதாவது: இந்த ஆண்டு நாவல் மரங்கள் நல்ல முறையில் பூப்பூத்து பலனுக்கு வந்துவிட்டது. தற்போது சீசன் துவங்கிய தருணம் என்பதால் விலை கூடுதலாக உள்ளது. இன்னும் 20 நாட்களில் சீசன் மும்முரம் பெறும். அதன்பின் 3 படி கூடையே ரூ.300 முதல் ரூ.400 வரை விலை குறைய வாய்ப்புள்ளது. நத்தம் பகுதி நாவல் பழம் ருசி மிகுந்து காணப்படும். மேலும் மருத்துவ குணம் வாய்ந்தது என்பதாலும் அனைவரும் இங்கு வந்து விரும்பி வாங்கி செல்கின்றனர். இவ்வாறு கூறினர்.

The post நத்தம் பகுதியில் நாவல் சீசன் துவங்கியது: ஒரு கூடை ரூ.600 வரை விலை போகிறது appeared first on Dinakaran.

Related Stories: