தஞ்சை மாவட்டத்தில் இயற்கை உரத்திற்காக விவசாய நிலங்களில் மேயும் செம்மறி ஆடுகள்

தஞ்சாவூர், ஜூன் 28: தஞ்சை மாவட்டத்தில் இயற்கை உரத்திற்காக விவசாயிகள் நிலங்களில் செம்மறி ஆடுகளை பட்டியிட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் பல லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. நெல் சாகுபடிக்கு மாட்டு சாணம், ஆட்டு புழுக்கை, இலைகள் போன்ற இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இயற்கை உரம் பயன்பாடு குறைந்து செயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்து வருகின்றனர். செயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்துவதால் அரிசி மற்றும் வைக்கோல், புல் ஆகியவை நச்சுதன்மை உடையதாக மாறிவிடுகிறது. இதை தவிர்க்க, விவசாயிகள் தற்போது, இயற்கை உர பயன்பாட்டுக்கு மாறி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது அறுவடை முடிந்து நடவு செய்ய உள்ள வயல்களில் செம்மறி ஆடுகளை விவசாயிகள் பட்டியிட்டு வைக்கின்றனர்.

ஒரு பட்டியில் குறைந்தது, 100 ஆடுகள் உள்ளன. இரவு நேரங்களில் நிலத்தில் ஆடுகளை பட்டியிடும் போது ஆடுகளின் புழுக்கை நிலத்தில் சேகரிக்கப்படுகிறது. இதுநெல் பயிருக்கு சிறந்த உரமாகும். இதற்காக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் இருந்து ஆடுகளை ஓட்டி வருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு பட்டிக்கு ரூ.500-க்கு மேல் விவசாயிகள் கொடுக்கின்றனர். தற்போது தஞ்சாவூர் பகுதிகளில் கோடை சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அறுவடை பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனால் தஞ்சாவூர் அருகே காடுகாவல் பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் இயற்கை உரத்திற்காக கால்நடைகளின் கழிவுகளை சேகரித்து வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். முந்தைய காலங்களில் விவசாயிகள் அதிகளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர்.

சமீபகாலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் இயற்கை உரம் அதிகளவில் கிடைப்பதில்லை. அதனால் இயற்கை உரத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுவதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்தது. இயற்கை உரத்துக்காக தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஆடுகளை வயல்களில் கிடை போடுவதற்காக அழைத்து வரப்படுகிறது. தரிசு நிலங்களில் பகலில் கால்நடைகள் மேயவிடப்பட்டு, இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து வைத்து உரங்களை சேகரிக்கின்றனர். குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக ஆடுகள் வயல்களில் மேயவிட்டு உரங்கள் சேகரிக்கப்படுகிறது.

The post தஞ்சை மாவட்டத்தில் இயற்கை உரத்திற்காக விவசாய நிலங்களில் மேயும் செம்மறி ஆடுகள் appeared first on Dinakaran.

Related Stories: