2000க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து சான்று பெறலாம்

அரியலூர், ஜூன் 28: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 1969 வழி வகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை , ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.

12 மாதங்களுக்குப் பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம். இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு-இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post 2000க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து சான்று பெறலாம் appeared first on Dinakaran.

Related Stories: