திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு பொருளாதார மேம்பாட்டு கடனுதவி

திருவாரூர், ஜூன் 28: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் பொருளாதார மேம்பாட்டு கடன் உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறுதொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்,

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரம் கடன்தொகை வரை ஆண்டிற்கு 7 சதவிகிதம் மற்றும் ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டிற்கு 8 சதவிகிதம் வட்டி ஆகும். குழுக்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு தொழில், வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை ஆண்டிற்கு 6 சதவிகித வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதற்கு சுய உதவிக்குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒருகுழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரு பாலருக்கான சுய உதவிக்குழு உறுப்பினர்களும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் -வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 ஆயிரம்- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7 சதவிகிதம் ஆகும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இக்கழக இணையதள முகவரியான www.tabcedco.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரார்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கியிடம் சமர்பிக்க வேண்டும். எனவே, திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்தவர்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு பொருளாதார மேம்பாட்டு கடனுதவி appeared first on Dinakaran.

Related Stories: