நாகை மாவட்டத்தில் 17 நாட்கள் நடந்த ஜமாபந்தியில் 156 மனுக்களுக்கு உடனடி தீர்வு

நாகப்பட்டினம், ஜூன் 28: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் 11ம் தேதி தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி 27ம் தேதி வரை (அரசு விடுமுறை நாட்கள் நீங்களாக) நடந்தது. அதன்படி நாகப்பட்டினம் தாலுகா அலுவலகத்தில் டிஆர்ஓ பேபி தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. திருக்கண்ணபுரம், திருமருகல், கங்களாஞ்செரி, நாகை, தெற்கு பொய்கை நல்லூர் உள் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளுக்கான வருவாய் கணக்கு முடிக்கும் நிகழ்வு நடைபெற்று வந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று மற்றும் இருப்பிட சான்று உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 11ம் தேதியிலிருந்து 27ம்தேதி வரை மொத்தம் 661 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதில் 156 மனுக்களுக்கு உடனடி தேர்வு காணப்பட்டது. மீதமுள்ள பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் டிஆர்ஓ பேபி இலவச வீட்டு மனை பட்டாக்களை பயனாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் ராஜா தலைமை இடத்து துணை தாசில்தார் தனஜெயன், மண்டல துணை தாசில்தார் ஜெயசெல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி உள்பட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நாகை மாவட்டத்தில் 17 நாட்கள் நடந்த ஜமாபந்தியில் 156 மனுக்களுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: