21 வயதிற்குட்பட்ட ஆண் 18 வயதுடைய பெண் குழந்தைக்கு திருமணம் செய்தால் 2 ஆண்டு சிறை

அரியலூர், ஜூன் 28: 18 வயதுடைய பெண், 21 வயதிற்குட்பட்ட ஆணிற்கு திருமணம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் குழுத்தலைவர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில், குழுத் துணைத்தலைவர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எம்.கிறிஸ்டோபர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எம்.எஸ்.மணிமேகலை ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கடந்த காலாண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். இதில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

கிராம அளவில் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் கிராமங்களை கண்டறிந்து பொதுமக்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். சமூகத்தில் பள்ளி மாணவர்களின் நல்லொழுக்கம் மேலோங்கிட ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தப்படவேண்டும். மாவட்டத்தில் வளர்ச்சிப்பெற வேண்டிய பகுதிகளில் பொதுமக்களுடைய பொருளாதார நிலை மேம்படுத்திட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது. பள்ளிகள் ஆரம்ப நேரம் மற்றும் முடிவு நேரங்களில் காவல் துறையினர் ரோந்துப் பணியை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில்மாவட்ட ஆனி மேரி ஸ்வர்ணா பேசுகையில், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கோ அல்லது 21 வயதிற்குட்பட்ட ஆணுக்கோ திருமணம் செய்தால் குழந்தை திருமணமாக கருதப்படும். இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். பொதுமக்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் 1098 என்ற குழந்தை உதவி எண்ணை தொடர்பு கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், மாவட்டத்தில் இதுவரை 128 அலைபேசி அழைப்புகள் வரப்பெற்று விசாரணை செய்து குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் இருப்பின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுகி குழந்தைகள் இல்லத்தில் சேர்ந்து கல்வி பயிலலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயராகவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) செல்வராசு, குழந்தைகள் நல குழுத்தலைவர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் அன்பரசி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவ அலுவலர் குழந்தைவேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 21 வயதிற்குட்பட்ட ஆண் 18 வயதுடைய பெண் குழந்தைக்கு திருமணம் செய்தால் 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: