தஞ்சாவூரில் கத்தரிக்காய் ஒரு கிலோ ₹80க்கு விற்பனை

தஞ்சாவூர், ஜூன் 28: தஞ்சையில் வரத்து குறைவால் கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை கடைகள் என 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தில் திருச்சி, திருவையாறு, திருமானூர்பட்டி போன்ற பகுதிகளில் இருந்து கத்தரிக்காய் விற்பனைக்காக அதிக அளவு கொண்டு வரப்படுகிறது. இதேபோல் தஞ்சையில் இருந்து வெளியூர்களுக்கும் கத்தரிக்காய் அனுப்பி வைக்கப்படுகிறது. காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு வழக்கமாக 20 முதல் 30 டன்கள் வரை கத்தரிக்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படும். கத்தரிக்காய் வரத்து அதிகமாக இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது கத்தரிக்காய் வரத்து குறைந்து விட்டது. எனவே அதன் விலை உயர்ந்து நேற்று ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவினால் தற்போது தினமும் கத்தரிக்காய் 10 டன்களே விற்பனைக்கு வருகிறது. விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விலை உயர்வால் கத்தரிக்காயை குறைந்த அளவே வாங்கிச்செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கிலோ ரூ.180க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் விலை குறைந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கத்தரிக்காய் வியாபாரி கூறுகையில், தஞ்சைக்கு கத்தரிக்காயின்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தற்போது விளைச்சல் இல்லாததால் விலை உயர்ந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன் குறைவாக இருந்த கத்தரிக்காய் நேற்று விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விலை உயர்வால் கத்தரிக்காயை விலை கேட்டவுடனே அதனை வாங்காமல் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post தஞ்சாவூரில் கத்தரிக்காய் ஒரு கிலோ ₹80க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: