போதை தவிர் கல்வியால் நிமிர் பதாகையுடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி: அரியலூர் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர், ஜூன் 28: போதை தவிர் கல்வியால் நிமிர் பதாகையுடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உலக போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தல் எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் கலந்து கொண்டார். பேரணியானது அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று அரியலூர் நகராட்சி காமராஜர் திடலில் முடிவடைந்தது. பேரணியில் அரியலூர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள், அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணாக்கர்கள் மற்றும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் என சுமார் 750 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் பேரணியில் கலந்துகொண்ட மாணாக்கர்கள் “போதையில் பயணம் விரைவில் மரணம், போதை தவிர் கல்வியால் நிமிர், போதையை மறப்போம்! ஒழிப்போம்!, போதையை விடு படிப்பை தொடு, உனக்கு தேவையா போதை ஊசி உன் குடும்பத்தை நீ யோசி” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர். முன்னதாக போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழிைய மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இப்பேரணியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயராகவன், அந்தோணி அரி, துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சாமி முத்தழகன், ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post போதை தவிர் கல்வியால் நிமிர் பதாகையுடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி: அரியலூர் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: