டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 2,327 காலியிடங்கள்: ஜூலை1ம் தேதி முதல் நெல்லையில் இலவச பயிற்சி

நெல்லை, ஜூன் 26: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மூலம் ஜூலை 1ம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப் 2 தேர்விற்கு உதவி ஆய்வாளர் (தொழிலாளர் துறை), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர்(நிலை-2) உள்ளிட்ட பதவிகளில் உள்ள 507 காலிபணியிடங்களுக்கும் மற்றும் குரூப் 2 ஏ பிரிவில் தணிக்கை ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர்(கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட பதவிகளில் 1,820 காலிபணியிடங்களுக்கும் என மொத்தம் 2,327 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத்தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும்.

முதல்நிலைத்தேர்வு செப்.14ம் தேதி நடக்கிறது. தேர்வு நடைமுறை, தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் வயது வரம்பு போன்ற கூடுதல் விவரங்களை https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 1ம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்படுகிறது. இந்தப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக இலவச நூலகத்தில் உள்ளன. இப்போட்டித் தேர்வுக்கான அறிமுக வகுப்பு ஜூலை 1ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள 17 சி, சிதம்பரம் நகர், பெருமாள்புரம் சி காலனியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு ஜூலை 1ம் தேதி காலை 10.30 மணிக்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். மேலும் ஜூலை 13ம் தேதி நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-I தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு மாநில அளவிலான முழு மாதிரி தேர்வு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 2, 5ம் தேதிகளில் நடக்கிறது. இந்த வாய்ப்பை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 2,327 காலியிடங்கள்: ஜூலை1ம் தேதி முதல் நெல்லையில் இலவச பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: