விருத்தாசலம், ஜூன் 29: விருத்தாசலத்தில் முன்னாள் எம்எல்ஏ மகனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தொடர்புடைய திருவிடைமருதூர் பேரூராட்சி கவுன்சிலரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் எம்எல்ஏ தியாகராஜன் மகன் இளையராஜா (47). இயற்கை விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் மகன்கள் புகழேந்தி, ஆடலரசு ஆகியோருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல் காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி இளையராஜா மணவாளநல்லூரில் உள்ள தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த புகழேந்தி, ஆடலரசு மற்றும் நான்கு பேர் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் இளையராஜா படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரன் மகன்கள் புகழேந்தி, ஆடலரசு உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். மேலும், கள்ளத்துப்பாக்கி எப்படி ராஜசேகருக்கு கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கள்ளத்துப்பாக்கி வாங்கியதில் திருவிடைமருதூர் சுயேட்சை கவுன்சிலருக்கு தொடர்பு இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு சென்று அவரை தேடியபோது சிக்கவில்லை. அவர், போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் பேரூராட்சி சுயேட்சை கவுன்சிலரான திருவிடைமருதூர் வடக்கு எடத்தெருவை சேர்ந்த மதியழகன் மகன் செந்தமிழ்ச்செல்வன் (30) என்பவரை நேற்று முன்தினம் விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர்.
The post முன்னாள் எம்எல்ஏ மகனை துப்பாக்கியால் சுட்ட வழக்கு 9 மாதத்துக்கு பின் கவுன்சிலர் அதிரடி கைது appeared first on Dinakaran.