பாக்கமுடையான்பட்டு அரசு பள்ளியில் மூலிகை செடிகளை வளர்க்கும் மாணவர்கள் பயன்களை கற்று அசத்தல்

புதுச்சேரி, ஜூன் 29: புதுச்சேரி பாக்கமுடையான்பட்டில் அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கடின உழைப்பால் பாலைவனமாக இருந்த இப்பள்ளி தற்போது பசுமையான பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் ஆடாதொடை, செம்பருத்தி, கற்பூரவள்ளி, தைலம், தூதுவளை, பிரண்டை, நொச்சி ,நுனா, உள்ளிட்ட பல்வேறு மூலிகைச் செடிகள் இந்தப் பள்ளியில் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாணவரும் மூலிகை செடிகளை, வெளியில் இருந்து வாங்கி வந்து தினந்தோறும் அதற்கு நீர் ஊற்றி தனியாக பராமரித்து வருகின்றனர். பாலைவனமாக இருந்த இந்த பள்ளி தற்போது மூலிகை தோட்டமாக மாறி உள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் இப்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி பள்ளி மழலைகள் கூறும்போது, ஒவ்வொரு செடிகளின் மருத்துவத்தை பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றியும் மூலிகை மருத்துவர் போன்று அழகாக நம்மிடம் விளக்கினார்கள். எனவே, பல்வேறு அரசு பள்ளிகள் மத்தியில் பாக்கமுடையான்பட்டு அரசு தொடக்கப்பள்ளி மூலிகை செடி வளர்ப்பதில் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. மூலிகை செடிகளின் பயன்பாடு மற்றும் மகத்துவம் குறித்து அறிந்து கொள்ள நாமும் இந்த பள்ளிக்கு செல்லும்போது மூலிகை செடிகளை பற்றி தெரிந்து கொண்டால் நமக்கும் பயனுள்ளதாக இருக்கும் நாமும் வீட்டில் மூலிகை செடிகளை வளர்த்து பயன்பெறலாம் என்றனர்.

மேலும் ஆசிரியர்களிடம் கேட்டபோது, வறண்டு பாலைவனமாக கிடந்த எங்களது பள்ளி இப்போது மூலிகை தோட்டமாக மாறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் அவை குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தினமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த செடிகளை மாணவர்கள் தனது சொந்த செலவில் வாங்கி பராமரித்து வருகின்றனர் என்றனர். புதுச்சேரியில் அரசு பள்ளிகள் என்றால் சுத்தமான காற்றோட்ட வசதி, கழிவறைகள், இடவசதிகள் இருக்காது என குறைபாடுகள் இருந்த நிலையில் தற்போது இந்நிலை மாறி தனியார் பள்ளிகளுக்கு நிகராக சில பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

The post பாக்கமுடையான்பட்டு அரசு பள்ளியில் மூலிகை செடிகளை வளர்க்கும் மாணவர்கள் பயன்களை கற்று அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: