கள்ளக்குறிச்சி, ஜூன் 29: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதனிடையே ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் நேற்று பலியான நிலையில் சாவு எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 19ம்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று வரை 145 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிறப்பு மருத்துவர்களை கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டன. அதில் 109 பேர் சிகிச்சையில் முன்னேற்றமடைந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 100 பேர் நேற்று முன்தினம் வரை 3 கட்டங்களாக நலமுடன் வீடு திரும்பினர். மேலும் 4வது கட்டமாக நேற்று கள்ளக்குறிச்சி வஉசி நகர் ராஜா(40), சங்கராபுரம் ராஜேந்திரன்(55), பாண்டலம் கார்த்திகேயன்(44), சேஷசமுத்திரம் பாலாஜி(48), கருணாபுரம் பழனியம்மாள்(70), நல்லாத்தூர் வேல்முருகன்(49), ரோடு மாமாந்தூர் தனசேகரன்(51), தாவச்சேரி சின்னகண்ணு(60), கள்ளக்குறிச்சி காந்தி தெரு பாலகுமார்(30) உள்ளிட்ட 9 பேர் சிகிச்சையில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினர்.
இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து 109 பேர்களும், புதுவை ஜிப்மரில் 6 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 22 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் இருந்து 4 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து ஒருவர், கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் இருந்து 2 பேர் என மொத்தம் இதுவரை 144 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷசாராய பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை 64 பேர் உயிரிழந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த கருணாபுரத்தைச் சேர்ந்த அய்யாசாமி மகன் பெரியசாமி (40) என்பவர் நேற்று இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 65 ஆனது. மீதமுள்ள 7 பேருக்கு தொடர்ந்து ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷ சாராயத்துக்கு அதிகபட்சமாக கருணாபுரத்தில் மட்டும் 39 பேர் பலியாகி உள்ளனர். அடுத்ததாக கள்ளக்குறிச்சியில் 7 மற்றும் மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதியில் தலா 4 பேர் இறந்துள்ளனர். தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 4 பேர்களும், சேலம் அரசு மருத்துவமனையில் 9, புதுவை ஜிப்மரில் 7 என மொத்தம் 20 நபர்கள் தொடர் சிகிச்சையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் * பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு appeared first on Dinakaran.