சிறுமியிடம் அத்துமீறிய ராணுவ வீரரை கைது செய்யக்கோரி அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆர்ப்பாட்டம்

குளச்சல்,ஜூன் 26 : கருங்கல் அருகே திப்பிரமலை பகுதியை சேர்ந்தவர் ஜெர்சன் (28). ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். கடந்த 5ம் தேதி பக்கத்து ஊரில் ஒரு வீட்டுக்கு சென்று, அங்கிருந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் வெட்டுக்கத்தி கேட்டார். உடனே சிறுமி வெட்டுக்கத்தி எடுத்து வர வீட்டுக்குள் சென்றார். அப்போது சிறுமியை பின் தொடர்ந்து ஜெர்சன் உள்ளே சென்று பாலியல் அத்துமீறல் நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய தாயிடம் நடந்ததைக்கூறி சிறுமி கதறி அழுதாள். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெர்சன் மீது போக்சோ பிரிவு உள்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை அறிந்த ஜெர்சன் தப்பி வேலைக்கு சென்று விட்டார். தற்போது அவர் காஷ்மீரில் ராணுவ பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் நடத்தி தப்பியோடிய ஜெர்சனை கைது செய்ய வலியுறுத்தி குளச்சல் அண்ணா சிலை சந்திப்பு அருகே அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெண்கள் கழக நிர்வாகி கார்மல் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் சுசீலா, பிரின்சி ஆகியோர் பேசினர். சிந்து, மரிய கிரேசி, மல்க் ரீட்டா, ஜாஸ்மின், தங்கலட்சுமி, ரோஸ்மேரி, சுஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சிறுமியிடம் அத்துமீறிய ராணுவ வீரரை கைது செய்யக்கோரி அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: