மார்த்தாண்டம் பகுதி ஓட்டல்களில் பணம் கேட்டு மிரட்டல்: வணிகர் சங்கங்களின் பேரவை கலெக்டரிடம் புகார்

 

நாகர்கோவில், ஜூன் 25 : மார்த்தாண்டம் பகுதி ஓட்டல்களில் சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக வணிகர் சங்கங்களின் பேரவையினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் டேவிட்சன் தலைமையில் நாகர்கோவில் மாநகரத் தலைவர் பால்ராஜ், செயலாளர் ஜேம்ஸ் மார்சல், கருங்கல் ஜார்ஜ், நாராயண ராஜா உட்பட பேரவை நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஹோட்டலில் வாங்கிய ‘பீப் பிரை’யில் பல்லி இருந்தது என்று மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளர் மகன் புகார் கொடுத்திருந்தார். போலீசார் ஹோட்டலில் நுழைந்து ‘பீப் பிரை’ அண்டாவுடன் ஹோட்டல் உரிமையாளரை குற்றவாளி போல் காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளனர்.

இந்தநிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரி வருகை தந்து பார்சலில் பல்லி வைக்கப்பட்டிருக்கும் ‘பீப் பிரை’யில் மாதிரி எடுக்க முடியாது, அது கடையை விட்டு வெளியே போய் எங்கு வேண்டுமானாலும் தவறு நடந்திருக்கலாம். அண்டாவில் உள்ள ‘பீப் பிரை’ யை பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று மாதிரி எடுக்கப்பட்டது. புகார்தாரர் பார்சலில் உள்ள ‘பீப் பிரை’ மாதிரி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்திய நிலையில், அது நடைபெறாததால் காவல் துறைக்கு புகார்தாரர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மாணவர் கல்லூரியில் படிப்பவர் அவர் மீது நடவடிக்கை வந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் புகாரை அவர் வாபஸ் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த செய்திகள் வெளியே வராமல் இருக்க ₹2 லட்சம் தர வேண்டும் என்று ஹோட்டல் உரிமையாளரிடம் சிலர் பேரம் பேசி உள்ளனர்.

அதற்கு அவர் உடன்படாததால் செய்தியை பரப்பி உள்ளனர். இது போன்று மற்றொரு ஹோட்டலை தொடர்பு கொண்டவர்கள் ஹோட்டலில் வாங்கிய கிரில் சிக்கனில் தீக்குச்சிகள் இருந்தது, வீடியோ கிளிப் எங்களிடம் உள்ளது. நேரில் சந்திக்க வேண்டும் என்று அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஓட்டலை மிரட்டி உள்ளனர். இவ்வாறு ஓட்டல்கள், உணவு நிறுவனங்களை சிலர் மிரட்டி பணம் பெற்றுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வியாபாரிகளையும் பொதுமக்களையும் பாதுகாத்திட வேண்டும். பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post மார்த்தாண்டம் பகுதி ஓட்டல்களில் பணம் கேட்டு மிரட்டல்: வணிகர் சங்கங்களின் பேரவை கலெக்டரிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: