101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

சென்னை: கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர் மாலை வைத்து மரியாதை செலுத்துகிறார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம். அதே போல் திமுக முன்னோடிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கலைஞரின் பிறந்தநாளான இன்று காலை 9 மணியளவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து 9.15 மணியளவில் அண்ணா நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு காலை 9.30 மணியளவில் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கு அவர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதன் பிறகு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். மேலும் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் இல்லத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ படத்திற்கும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். மேலும் சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்திலும் கலைஞரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை திமுக கிளை கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கலைஞரின் திருவுருவப் படத்தினை வைத்து, கட்சி தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்திட, மாவட்ட-மாநகர-ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-வட்ட- கிளைக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் தமிழகம் முழுவதும் திமுக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் என தொடர் நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

The post 101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: