புதுகையில் பாதிரியார் வீட்டில் நகை கொள்ளை: இலங்கை தமிழ் அகதிகள் முகாம் வாலிபர் கைது

 

புதுக்கோட்டை, மே 30: புதுக்கோட்டை நகரில் பாதிரியார் வீட்டில் பூட்டை உடைத்து நகைகளைத் திருடியவர் தன்னுடைய கைரேகையால், 24 மணி நேரத்துக்குள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை கணேஷ்நகர் முதல் வீதியில் வசித்துவருபவர் ஜான் தேவசகாயம் (56). இவர், மாலையீட்டிலுள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். கடந்த 22ம் தேதி இவர் குடும்பத்துடன் கோவைக்குச் சென்றுவிட்டு 28ம் தேதி வீடு திரும்பினார்.அப்போது வீடு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, தனிப்படை அமைத்து குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் பாதிரியாரின் வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட கைரேகைகள், தொடர் நகைத் திருட்டு குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.அப்போது, மதுரை திருமங்கலம் அருகேயுள்ள கூத்தியா்குண்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் கேதீஸ்வரன் (34) என்பவரின் கைரேகையுடன் ஒத்துப்போனது.

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படையினர், கேதீஸ்வரனைக் கைது செய்தனர். அவரிடமிருந்து, ரூ. 14.45 லட்சம் மதிப்புள்ள 36 பவுன் தங்க நகைகளையும், ஒரு லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸையும் பறிமுதல் செய்தனர். 24 மணி நேரத்தில் குற்றவாளியைக் கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் அழைத்துப் பாராட்டினார்.

 

The post புதுகையில் பாதிரியார் வீட்டில் நகை கொள்ளை: இலங்கை தமிழ் அகதிகள் முகாம் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: