தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்வணக்கம்பாடி ஊராட்சிக்குட்பட்ட தேசூர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு(35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கனகா(33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலு தனது இருசக்கர வாகனத்தில் தண்டராம்பட்டு பதிவுத்துறை அலுவலகம் வழியாக சென்றபோது எதிரே வந்த வாகனத்துடன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, கூலித்தொழிலாளி வேலு மூளைச்சாவு அடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது மனைவி ஒப்புதலின்பேரில், வேலுவின் கண், நுரையீரல், கல்லீரல், இதயம் உட்பட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
இந்நிலையில், அவரது உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இறுதிச்சடங்குகளை செய்தனர். மேலும், உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட கூலித்தொழிலாளி வேலுவின் உடலுக்கு அரசு மரியாதையாக, ஆர்டிஓ மந்தாகினி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, தாசில்தார் நடராஜன், மண்டல துணை தாசில்தார் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜூலு, விஏஓ அழகேசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
The post தண்டராம்பட்டு அருகே விபத்தில் மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை appeared first on Dinakaran.