கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து வௌியில் வந்த கெஜ்ரிவால் மக்களவை தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ தன் வாதத்தில், ‘‘மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியும் குற்றவாளியாக சேர்க்கப்பட உள்ளது. மேலும் இந்த வழக்கில் தற்போது இடைக்கால ஜாமீனில் இருக்கும் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரங்களின் போது, தனக்கு பொதுமக்கள் வாக்களிக்கவில்லை என்றால் மீண்டும் ஜூன் 2ம் தேதி சிறைக்கு செல்ல நேரிடும் என்று கூறி வருகிறார். இது உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிரானதாகும்.

அதனை அனுமதிக்கக் கூடாது. அதுகுறித்து உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது, “டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை நீங்கள் கைது செய்ததற்கு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அது சரியானதா என்பது கேள்விக்குறியா உள்ளது. மேலும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்குள் நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை.

யாருக்கும் நீதிமன்றம் தனிப்பட்ட முறையில் சலுகை காண்பிப்பது கிடையாது. அதைபோலவே விதிவிலக்கும் அளிக்கவில்லை. அனைத்து வழக்குகளிலும் சட்டப்படியான உத்தரவுகள்தான் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனை ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விருப்பம். அதற்கு மேல் நாங்கள் இதில் தெளிவுப்படுத்த எதுவும் இல்லை.

மேலும் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் என்பது அவரது அரசியல் சார்ந்த ஒன்று என்பதால், அதில் நாங்கள் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதில் அமலாக்கத்துறை ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அதனை மட்டும் எங்களால் திட்டவட்டமாக தெரிவிக்க முடியும் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.

The post கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: