தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை திறந்து விட வேண்டும்: ஒழுங்காற்று குழு பரிந்துரை

புதுடெல்லி: காவிரியில் தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 21ம் தேதி அதன் தலைமை எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடக்க உள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று காணொலி வாயிலாக நடத்தப்பட்டது.

இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் தரப்பில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டின் தரப்பில் இருந்து தலைமை பொறியாளர் சுப்பிரமணியம் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நீர் பங்கீடு, அணை பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மே மாதம் வரை தரவேண்டிய 10 டிஎம்சி நீரில், 3.8 டிஎம்சி மட்டுமே கர்நாடக அரசு காவிரியில் இருந்து தந்துள்ளது.

நிலுவை நீரான 6.2 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோன்று ஜூன் மாதத்திற்கு தர வேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை தடையின்றி திறக்கவும் கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு தரப்பில் அறிவுறுத்தலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.ஆனால் கர்நாடகா அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா, தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும், வரும் 21ம் தேதி நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட உள்ளது.

The post தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை திறந்து விட வேண்டும்: ஒழுங்காற்று குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: