முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்லி அமைச்சர் ராஜினாமா: ஈடி மிரட்டலுக்கு பயந்துவிட்டார் என ஆம்ஆத்மி கருத்து

புதுடெல்லி: டெல்லி சமூகநலத்துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் நேற்று தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகினார். அவர் ஈடி மிரட்டலுக்கு பயந்துவிட்டார் என்று ஆம்ஆத்மி கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. இவரது அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக ராஜ் குமார் ஆனந்த் பதவி வகித்து வந்தார். டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங்கை தொடர்ந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதில் சஞ்சய் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து விட்டது. டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கும் மே 25ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் தொடர்பான பணிகளில் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் படேல் தொகுதி பேரவை உறுப்பினரும், சமூக நலத்துறை அமைச்சருமான ராஜ் குமார் ஆனந்த், ஊழலில் ஈடுபட்ட கட்சியில் இருக்க விரும்பவில்லை என்று கூறி நேற்று தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து ஆம் ஆத்மி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்தில் இருந்தும் ராஜ் குமார் ஆனந்த் விலகினார். இது குறித்து ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆம் ஆத்மி தலைவர்களை பயமுறுத்த அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறைகளை பாஜ பயன்படுத்துகிறது. முன்பு ராஜ் குமார் ஆனந்தை ஊழல்வாதி என்று சொல்லி அமலாக்கத்துறை மூலம் சோதனை செய்த பாஜ இப்போது அவரை மாலை அணிவித்து வரவேற்கும்” என்று குற்றம்சாட்டினார். “ஆம் ஆத்மியில் இருந்து விலகும்படி ஆனந்த் ஈடியால் மிரட்டப்பட்டிருக்கலாம்” என்று அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறினார்.

The post முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்லி அமைச்சர் ராஜினாமா: ஈடி மிரட்டலுக்கு பயந்துவிட்டார் என ஆம்ஆத்மி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: