திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. லோக வைகுண்டம் எனப்ேபாற்றப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை கோயில் கருவறை அருகே உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று காலை தங்க ரதத்தில் தேவி, பூதேவி தாயாருடன் மலையப்பசுவாமி மாடவீதிகளில் வலம் வந்தார். ஏகாதசி மறுநாளான (இன்று) துவாதசி என்பதால் தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று காலை 6 மணிக்கு ஏழுமலையான் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதனிடையே வைகுண்ட ஏகாதசியான நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு 12.30 மணி வரை மொத்தம் 67 ஆயிரத்து 906 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். 28 ஆயிரத்து 492 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

பக்தர்கள் ₹2.50 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தினர். சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் வரும் ஜனவரி 1ம்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இலவச டோக்கன்கள் வரும் 30ம்தேதி வரை நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று காலை முதல் வரும் 31 மற்றும் ஜனவரி 1ம்தேதிக்கான 80 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

வரும் 1ம்தேதி வரை ₹300 தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். எந்தவித டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்பட்டாலும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க படமாட்டார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Related Stories: