6ம் கட்ட மக்களவை தேர்தலில் 866 வேட்பாளர்களில் 338 பேர் கோடீஸ்வரர்கள்: முதல் இடத்தில் பாஜ வேட்பாளர்

புதுடெல்லி: வரும் 25ம் தேதி நடக்க உள்ள 6ம் கட்ட மக்களவை தேர்தலில் போட்டியிடும் 866 வேட்பாளர்களில் 338 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார். இதுவரை 4 கட்ட மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் 20ம் தேதி 5ம் கட்ட தேர்தலும், 25ம் தேதி 6ம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது. இதில், 6ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் புள்ளிவிவரங்களை ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) நேற்று வெளியிட்டது.

அதில், 6ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 866 வேட்பாளர்களில் 338 பேர், அதாவது 39 சதவீதம் பேர் தங்களுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக கூறி உள்ளனர். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.21 கோடி. இதில், அரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளரும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் ரூ.1,241 கோடி சொத்துடன் முதல் இடத்தில் உள்ளார். ஒடிசாவின் கட்டாக் தொகுதி பிஜூ ஜனதா தள வேட்பாளரும், ஆதித்யா பிர்லா குழும நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறையின் முன்னாள் தலைவருமான சந்த்ருப்த் மிஸ்ரா ரூ.482 கோடியுடன் 2ம் இடத்திலும், குருஷேத்ரா தொகுதி ஆம் ஆத்மியின் வேட்பாளர் சுஷில் குப்தா ரூ.169 கோடியுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

முக்கிய கட்சிகளில், பிஜூ ஜனதா தளத்தின் 6 வேட்பாளர்களும், ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தளத்தின் 4 வேட்பாளர்களும், பாஜவின் 51 வேட்பாளர்களில் 48 பேரும் (94 சதவீதம்), சமாஜ்வாடியின் 12 வேட்பாளர்களில் 11 பேரும் (92 சதவீதம்), காங்கிரசின் 25 வேட்பாளர்களில் 20 பேரும் (80 சதவீதம்), ஆம் ஆத்மியின் 5 வேட்பாளர்களில் 4 பேரும் (80 சதவீதம்), திரிணாமுல் காங்கிரசின் 9 வேட்பாளர்களில் 7 பேரும் (78 சதவீதம்) கோடீஸ்வரர்கள் ஆவர்.

ரோதக் தொகுதி சுயேச்சை வேட்பாளர் மாஸ்டர் ரந்தீர் சிங் ரூ.2 மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும், பிரதாப்கரில் போட்டியிடும் எஸ்யூசிஐ(கம்யூனிஸ்ட்) வேட்பாளர் ராம் குமார் யாதவ் ரூ.1,686 மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், 180 வேட்பாளர்கள் (21 சதவீதம்) தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதாகவும், 6 பேர் தங்களுக்கு எதிராக கொலை வழக்கு இருப்பதாகவும், 24 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

The post 6ம் கட்ட மக்களவை தேர்தலில் 866 வேட்பாளர்களில் 338 பேர் கோடீஸ்வரர்கள்: முதல் இடத்தில் பாஜ வேட்பாளர் appeared first on Dinakaran.

Related Stories: