பாஜ கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் அமர்பிரசாத் ரெட்டி உட்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ஆலந்தூர்: பனையூரில் அண்ணாமலை வீடு முன்பு அமைக்கப்பட்ட பாஜ கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமர்பிரசாத் ரெட்டி உட்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை அடுத்த பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு, அனுமதியின்றி அமைக்கப்பட்ட சுமார் 45 அடி உயர பாஜ கொடி கம்பத்தை போலீசார் அகற்றியபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கிரேன் கண்ணாடியை உடைத்து பாஜவினர் ரகளையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜ விளையாட்டுத் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, பள்ளிக்கரணை செந்தில், நங்கநல்லூர் வினோத், மடிப்பாக்கம் சுரேந்தர் உள்பட 6 பேரை கைது சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அமர்பிரசாத் ரெட்டி, வினோத், செந்தில், சுரேந்தர் ஆகிய 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி கானாத்தூர் போலீசார் ஆலந்தூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று மாஜிஸ்திரேட் சந்திரபிரபா முன் வந்தது.

அப்போது சிறையில் இருந்த அமர்பிரசாத் ரெட்டி, வினோத், செந்தில், சுரேந்தர் ஆகிய 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பனையூர் போலீஸ் ஆய்வாளர் சதீஸ், வழக்கில் புலன் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 4 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரினார். போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என பாஜ தரப்பு வக்கீல் பால் கனகராஜ் வாதிட்டார்.
வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட், அமர்பிரசாத் உட்பட 4 பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அமர்பிரசாத் ரெட்டி உள்பட 4 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து பாஜ துணை தலைவரும், வழக்கறிஞருமான பால்.கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, போலீசார் 5 காரணங்களை கூறி 4 பேரையும் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர். கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படும் கிரேன் பதிவு எண் இரு சக்கர வாகனத்திற்கு உரியது. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமது தரப்பட்டுள்ளது என்றார்.

The post பாஜ கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் அமர்பிரசாத் ரெட்டி உட்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: