சென்னை: தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது 3 பேருக்கு அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கலைஞர் பிறந்தநாளையொட்டி 3.6.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.
மரபுத்தமிழ் வகைப்பாட்டில், கம்பன் கழகத்தில் செயற்குழு உறுப்பினராக பணியாற்றியவரும் தமிழறிஞர்களின் வழிகாட்டுதல்களோடு இலக்கியப்பணியாற்றி வரும் இலக்கிய சுடர் த.இராமலிங்கம் (68), ஆய்வுத்தமிழ் வகைப்பாட்டில். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான எழுத்தாளர் சி.மகேந்திரன் (73), படைப்புத்தமிழ் வகைப்பாட்டில், திராவிடச் சிந்தனையில் ஆழ்ந்து பல படைப்பு நூல்களை வெளியிட்ட அறிவுத்திலகமான விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இரா.நரேந்திரகுமார் (74) ஆகியோர் இவ்விருதுக்கு இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
விருது தொகை ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்பெற்று, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படுவார்கள். இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் திருநாளான 16.01.2026 அன்று வழங்க உள்ளார்.
