ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக இருப்பவர் பூபதி. இவர், கடந்த மே மாதம் கொலை வழக்கு தொடர்புடைய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக காடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டியைச் சேர்ந்த அலமேலு (25), எஸ்.ஐ. பூபதியிடம் தான் வக்கீல் என அறிமுகம் செய்து பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறியுள்ளார். அடிக்கடி சந்தித்து கொண்டதில் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பொய் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை வெளியே எடுக்க பணம் வேண்டும் எனக்கூறி எஸ்ஐ பூபதியிடம் ரூ.92 ஆயிரம் பறித்துள்ளார். பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் பூபதியை தொடர்பு கொண்டு ஊமகவுண்டம்பட்டி பகுதிக்கு வந்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு அலமேலு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இரவு 11 மணியளவில் அங்கு சென்ற பூபதி அலமேலுவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், போட்டோ மற்றும் வீடியோ எடுத்து, அதைக்காட்டி பூபதியை மிரட்டி மூன்றரை பவுன் செயினை பறித்ததோடு, ஜிபே மூலம் ரூ.27 ஆயிரம் பெற்றுக்கொண்டு தப்பினர். இதுகுறித்து எஸ்ஐ பூபதி தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
அலமேலுவை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது அவர் பிளஸ் 2 மட்டுமே படித்த டுபாக்கூர் வக்கீல் என்பதும், வழக்கறிஞர் உடையில் காவல் நிலையத்திற்கு வந்து கட்டப்பஞ்சாயத்து பேசி வந்ததும், இவரது சகோதரர், காடையாம்பட்டி ஒன்றிய பாஜ தலைவராக இருப்பதும் தெரியவந்துள்ளது. எஸ்ஐயை மிரட்டியதில் மூளையாக செயல்பட்டதும் தெரியவரவே அவரையும், ஊமகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விசிக ஒன்றிய துணை செயலாளர் குள்ளப்பன் மகன் வீரவளவன்(எ) முருகேசன்(36), செல்லா(எ) செல்வம்(28), திருமால் அழகன்(21), பிரவீன்குமார்(23) ஆகியோரையும் கைது செய்தனர்.
